"பைசன் - காளமாடன் வெல்லட்டும்!" மாரி செல்வராஜ் படத்திற்கு இரவு 1 மணிக்கு முதல் ஆளாக உதயநிதி ரிவ்யூ
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று பைசன் திரைப்படம் வெளியாகிறது. இதற்கிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு இந்த படத்தைப் பார்த்துள்ளார். மாரி செல்வராஜ் மிக முக்கியமான ஒரு படைப்பைத் தந்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். மேலும், பைசன் - காளமாடன் வெல்லட்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என இவரது ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவில் முக்கிய படைப்புகளாக இருந்தன. மேலும், கமர்சியல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன. சமூகத்தில் இருக்கும் சாதிய அரசியலைப் பேசும் படமாகவே இவை உள்ளன.

இதற்கிடையே இவர் இப்போது பைசன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கபடி வீரரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் சந்திக்கும் சாதிய அடக்குமுறைகளை இந்த படம் எடுத்துக் காட்டுகிறது.
தீபாவளி வெளியீடாக இப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. மாரி செல்வராஜின் எல்லா படங்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், பைசன் படத்தின் மீதும் மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பைசன் படத்தை பார்த்துள்ளார்.
பைசன் மூலம் மிக முக்கியமான படைப்பை மாரி செல்வராஜ் தந்துள்ளதாக உதயநிதி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார். படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் - காளமாடன் வெல்லட்டும்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று பைசன் படம் ரிலீஸ் ஆகிறது. அத்தோடு பிரதீப் ரங்கநாதனின் டூயூட், ஹரிஷ் கல்யாணின் டீசல் படங்களும் இன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications