விஜய் - தவெக பற்றி.. பாஜக அவசர அவசரமாக நடத்திய சர்வே? வெளியான எதிர்பார்க்காத ரிசல்ட்! பின்னணி
சென்னை: பாஜக நடத்திய உட்கட்சி சர்வே ஒன்றில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தவெக பற்றி இதில் முக்கியமான சில சர்வே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில் சரியான கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்ததாக கூறப்படுகிறது.
பாஜக சார்பாக தேசிய சர்வே அமைப்பு ஒன்றை வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளதாம். தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது, எவ்வளவு எதிர்ப்பு உள்ளது, எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு எவ்வளவு ஆதரவு உள்ளது, எவ்வளவு எதிர்ப்பு உள்ளது என்று கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாம்.

பாஜக சர்வே
அதோடு நிற்காமல் பாஜக யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெற முடியும். தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியுமா? ஆட்சியை பிடிக்குமா? என்பது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. அதில் விஜய் உடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்கலாமா? தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவு இருக்கிறதா? என்று கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாம்.
நடிகர் விஜயின் TVK கட்சியின் எழுச்சியால் மாநில அரசியல் களத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்த சர்வே சுட்டிக்காட்டுகிறதாம். அதாவது தவெக உடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பாஜகவின் இந்த சர்வே கூறி உள்ளதாம்.
பாஜக தவெக கூட்டணி
இந்த ஆய்வின்படி, தவெக தனித்து 26 சதவீத வாக்கு வங்கியைப் பெறக்கூடிய அளவிற்கு வலுவான அடித்தளத்தை பெற்றுள்ளது . இதனால் எந்தக் கூட்டணியிலும் தவெக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும். தவெக அதிமுக மற்றும் பாஜக இணையும் பட்சத்தில், அவற்றின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 50ஐ கடக்க வாய்ப்புள்ளதாக இந்த சர்வே கூறுகிறது.
கடந்த பல பத்தாண்டுகளில் எந்தக் கூட்டணியும் எட்டாத இந்த எண்ணிக்கை இது. இந்த கூட்டணி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு வலியுறுத்துகிறது. அதாவது பாஜக - அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு. அதில் தவெக இணைந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம் என்பதை தாண்டி இந்த கூட்டணி 50 சதவிகித வாக்குகளை கடக்கும். அப்படி நடந்தால் ஆட்சி கன்பார்ம் என்று இந்த சர்வே கூறுகிறதாம்.
தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த பாஜக பல ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களைச் சென்றடைய பல முக்கிய மற்றும் வியூக ரீதியான நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை நிறுவியது ஒரு முக்கிய நகர்வு; இதை தமிழ்நாட்டிற்கான கலாச்சார, அரசியல் மூவ்வாக பாஜக முன்னிறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்து, நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ் மக்களை சந்தித்து கட்சியின் இருப்பை வலுப்படுத்தி வருகிறார். தமிழ் மொழிதான் பழைய மொழி என்றும் கூறி வருகிறார்.
பாஜக கவனம்
பாஜக தலைமை சமூக மற்றும் சாதிப் பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தியுள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரை துணைத் தலைவராக்கியது, மேற்குத் தமிழக வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சி. மேலும், நயினாரை மாநிலத் தலைவராக்கியதன் மூலம், தென் தமிழ்நாடு வாக்காளர்களை இழுக்க முயன்றது, பாரம்பரிய அதிமுக ஆதரவாளர்களை ஈர்க்க முயன்றது போன்ற நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது..
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சர்வே மாநில அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. இறுதி முடிவு கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வாக்காளர் மனநிலையைப் பொறுத்தே அமையும். எனினும், பாஜக - அதிமுக - தவெக கூட்டணி, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் வலுவான போட்டியாளராக உருவாகலாம் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications