நாம் எதிர்க்கப்போவது பெரிய பிசாசு.. 2 மாசம் தான் டைம்.. உழைக்கலைனா வெளிய போ.. கடுகடுத்த துரைமுருகன்!
சென்னை : பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. பணம் மற்றும் அதிகார பலத்தோடு நமக்கு எதிராகப் போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன், திமுக நிர்வாகிகளுக்கு கண்டிப்போடு அறிவுறுத்தியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பாஜக தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினும், பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், வேலூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பாஜகவின் தேர்தல் பணிகள் வேகமாக இருப்பதால் குறித்து கடுமையாக எச்சரிக்கும் வகையில் திமுகவினர் மத்தியில் பேசி இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

பாஜக தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை பெற்றே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் என பம்பரமாகச் சுழன்று வருகிறது. பூத் கமிட்டிகளை வலுவாக அமைப்பதில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மேலிட தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து பணிகளை முடுக்கிவிட்டுச் செல்கின்றனர். பாஜகவின் தீவிர பணிகள், மற்ற கட்சிகளையும் பரபரப்புக்குள்ளாக்கி வருகின்றன.

திமுகவும் வேகம்
இந்நிலையில், தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என திமுக தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கண்டிப்பு காட்டிய ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி, தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் திமுகவினர் செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தலில் தோற்றால் நீங்கள் தான் பொறுப்பு. கேள்வி கேட்பேன் என்று மட்டும் நினைக்காதீர்கள், நடவடிக்கை எடுப்பேன் என பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் கண்டிப்பு காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

வேலூரில் கூட்டம்
தொடர்ந்து, மாவட்டந்தோறும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. வேலூர்மாவட்டம், லத்தேரியில் திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த்,ஜெகத் ரட்சகன், உள்ளிட்டோரும், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பாஜக பற்றி எச்சரித்துள்ளார்.

அதிகாரிகள் நம் பேச்சை கேட்பதில்லை
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "நமக்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்கள் 7 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் வட்டி கட்டுகிறோம். நிதி இலாகா தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் பலர் நம் வழியில் நிற்கவில்லை. சில அதிகாரிகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததே பிடிக்கவில்லை. அவர்களை நாம் வெறுக்க முடியாது. இந்த நிலையை எல்லாம் மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் லகான் இன்னும் சரியாக எங்கள் கைக்கு வரவில்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார். இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்.

ராட்சசனை பார்க்கப் போகிறோம்
திமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்களுக்கெல்லாம் கட்டளையிடுகிறேன். ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும், ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிளை கழகத்திற்கும் சென்று கூட்டம் நடத்தி ஆதாரத்துடன் வரவேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக மாற்றப்படுவார்கள். பூத் கமிட்டியை டிசம்பர் மாதத்திற்குள் அமைக்க வேண்டும், யார் உழைக்கிறார்களோ அவர்களை பூத் கமிட்டியில் போடுங்கள், இதுவரை நமது எதிரி அதிமுகவை எதிர்த்தோம்.

பிசாசு போல பாஜக
இந்த முறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. பணம் மற்றும் அதிகார பலத்தோடு போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் 40-க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்
அப்போது தான் அதிகாரிகளும் நமக்கு பயப்படுவார்கள், மத்திய அரசும் பயப்படும். அதற்குப் பின் நம்மிடம் அவர்கள் பேசுவார்கள். இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்கப் போகிறோம். கூட்டணியில் யார் என்பதையெல்லாம் தலைவர் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார், நீங்கள் தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள்" என நிர்வாகிகளுக்கு பல ஆலோசனைகளை வெளிப்படையாகவே வழங்கியுள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications