• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரஜினிகாந்த், ஜிகே வாசன், ஒருங்கிணைந்த அதிமுக.. இத்தனை முதுகில் சவாரி செய்ய போராடும் பாஜக!

|
  சசிகலா, ரஜினி யாரை களமிறக்குவது ? குழப்பத்தில் பாஜக

  சென்னை: வட இந்திய மாநிலங்களில் கட்சிகளை கபளீகரம் செய்து ஆட்சி அதிகாரத்தை ருசி பார்த்துக் கொண்டிருக்கும் பாஜகவால் தமிழகத்தில் அந்த சூது திட்டத்தை அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. இதனால்தான் 'சிக்குகிற' கட்சிகள் அத்தனை மீதும் சவாரி செய்தாவது தாமரையை மலரச் செய்துவிட துடிக்கிறது பாஜக.

  வலதுசாரி இந்துத்துவா தத்துவத்தை பிரசாரமாக முன்வைத்து அதிகாரத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது பாஜக. ஆனால் இந்துத்துவா தத்துவத்தை வைத்துக் கொண்டு அப்படி எல்லாம் அனைத்து மாநிலங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டது பாஜக. இதனால் கட்சிகளின் பலவீனங்களை தமக்கு சாதகமாக்கி அறுவடை செய்ய தொடங்கியது.

  இந்த அதிகார வேட்டையை வடகிழக்கு மாநிலங்களில் பரிசோதனை முயற்சியாக நடத்திப் பார்த்தது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் கைகள்தான் ஓங்கி இருந்தது. குறிப்பாக கிறிஸ்தவ வாக்காளர்கள் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம். ஏற்கனவே இந்தியாவை தங்களது நாடாகவே இன்னமும் ஏற்காமல் 'நீங்கள் இந்தியர்கள்' என பேசுகிறவர்கள் வடகிழக்கு மக்கள். அவர்களுக்கு நேர் எதிரியான பாஜகவை அவ்வளவு சுலபமாக அனுமதிக்காமல்தான் இருந்தார்கள்.

  காங்கிரஸை கரைத்து...

  காங்கிரஸை கரைத்து...

  ஆனால் காங்கிரஸ் கட்சிகளில் இருந்த அதிகார சபலிஸ்டுகளை கணக்கெடுத்து தம் பக்கம் வளைத்தது. அப்படி கட்சி தாவி தம்முடன் இணைந்தவர்களுக்கு முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, மாநில தலைவர் பதவி என அத்தனையையும் தந்தது பாஜக. இதனால் பாஜகவுக்கு ஏகபோக ஆதரவு பெருகிறது. சொந்த முகத்தை காட்டிக் கொண்டு வாக்கு கேட்க திராணியற்று இரவல் முகத்துடன் அதிகார கோட்டை நோக்கி நகர்ந்தது. இதனால்தான் அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா என வடகிழக்கில் காவி கொடி பறக்கத் தொடங்கியது.

  காங்கிரஸை விழுங்கிய பாஜக

  காங்கிரஸை விழுங்கிய பாஜக

  மணிப்பூரிலும் திரிபுராவிலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை அப்படியே விழுங்கி பாஜக என பெயர் மாற்றிக் கொண்டது. நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். கட்சி தாவி வந்தவர்களுக்கே முதல்வர் பதவி.. அத்தனை பேரும் மாஜி காங்கிரசார்.. அவர்கள் முதுகில் மட்டும் காவி லேபிள். இப்படித்தான் வடகிழக்கில் பாஜக சாதித்தது.

  இடதுசாரிகளை வளைத்த பாஜக

  இடதுசாரிகளை வளைத்த பாஜக

  இதே பாணியைத்தான் மேற்கு வங்கத்திலும் கடைபிடித்தது. மேற்கு வங்கத்தில் வலதுசாரிக்கு பரமவைரியான இடதுசாரிகளை தங்கள் வசமாக்கினர். ஏனெனில் மேற்கு வங்க இடதுசாரிகளில் பெரும்பாலானோர் உயர்ஜாதி இந்துக்கள். அவர்கள் என்னதான் இடதுசாரி தத்துவம் பேசினாலும் அவர்களுக்குள் ஆழப்புரையோடிருந்த இந்துத்துவா பாசத்தை அல்லேக்காக அறுவடை செய்து அங்கும் காவி கொடியை வெற்றிக் கொடியாக காட்டிக் கொண்டது.

  மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு குறி

  மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு குறி

  உத்தரப்பிரதேசம், ஒடிஷா என வட இந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் மாநில தலைவர்களை முதலில் வளைத்துப் போடு; அப்படியே மெல்ல மெல்ல காங்கிரஸை கரைத்துவிடு என்பதுதான் பாஜகவின் பாலிசி. இப்போது மகாராஷ்டிராவிலும் இந்த பார்முலாவை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது பாஜக.

  ஈழவர் வாக்குக்கு குறி

  ஈழவர் வாக்குக்கு குறி

  கேரளாவிலும் கூட இடதுசாரிகளின் வாக்கு வங்கியான ஈழவர்களுக்கு குறிவைத்து விளையாடிப் பார்த்தது பாஜக. அதனால் அந்த வாக்கு வங்கியில் சிறு ஓட்டையைத்தான் போட முடிந்தது. பிற மாநிலங்களைப் போல பிரதானமாக சாதித்துவிட முடியவில்லை.

  தமிழகத்தில் வெற்றிடமாம்

  தமிழகத்தில் வெற்றிடமாம்

  பாஜகவின் இந்த கலவை சாத பார்முலா வேலைக்கே ஆகாத ஒரு மாநிலமாக இருந்து வருகிறது எனில் தமிழ்நாடு மட்டும்தான். அதுவும் ஜெயலலிதா, கருணாநிதி எனும் இரு பெரும் ஆளுமைகள் மறைந்த பின்னர் பாஜகவுக்கு சொல்ல வேண்டுமா என்ன? வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளி குதித்தது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் என வறட்டு கத்து கத்தினர்.

  பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக

  பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக

  முதலில் பலவீனமான தலைமை கொண்ட அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாஜக. அக்கட்சித் தலைவர்களை பாஜகவில் சேர்க்காமலேயே கிளைக் கழகம் போல நடத்திக் கொண்டும் இருக்கிறது. தமிழக அரசையே பாஜகதான் இயக்கி வருகிறது. அதிமுகவுடன் ரஜினிகாந்தையும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்தால் எல்லாமும் சுபம் என சூப்பர் டூப்பர் கணக்குப் போட்டது. ஆனால் சூப்பர் ஸ்டாரோ இதோ வருகிறேன்...அதே வருகிறேன் என போக்கு காட்டிக் கொண்டு டாட்டா காட்டி வருகிறார்.

  தத்துவார்த்த யுத்தம்

  தத்துவார்த்த யுத்தம்

  இதனால் லோக்சபா தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா என ஒரு கலவையான கூட்டணியை உருவாக்கி பரீட்சைக்கு போனது பாஜக. எதிர்முகாமில் திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக என பாஜகவின் வலதுசாரி சித்தாந்தத்தை கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் கைகோர்த்து நின்றன. பாஜகவின் மென்மை முகம் வளர்ச்சி என்கிற கூப்பாடு; பாஜகவின் கோர முகம் இந்துத்துவா என்கிற நிலைப்பாடு என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட நிலம் தமிழ்நாடு. இதைத்தான் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளும் தேர்தல் களத்தில் பிரசாரமாக முன்வைத்தன. அப்புறம் என்ன பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குப்புற கவிழ்ந்தன.

  தமாகாவுக்கு இலக்கு

  தமாகாவுக்கு இலக்கு

  பிற மாநிலங்களைப் போல இந்துத்துவா முகமூடியை இங்கேயும் தற்காலிகமாக கழற்றி வைத்துவிட்டு வளர்ச்சி அவதாரம் பூசத்தான் பாஜக விரும்புகிறது. ஆனால் இங்கே திராவிட அரசியல் வேர்பிடித்து நிற்பதால் அதை அசைத்துப் பார்க்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. இதனால் இன்னொரு முயற்சியாக புதிய பார்முலாவை கையில் எடுக்க முயற்சிக்கிறது அக்கட்சி. முதலில் பாஜகவைப் போல ஆங்காங்கே இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸை தங்களுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது. பாஜகவின் ஆஸ்தான தொழிலதிபரும் தமாகாவின் தலைமையும் மிக நெருக்கம். தற்போதைய நிலையில் தமாகாவும் ஓகே சொல்லியிருக்கிறது. ஆனால் எப்போது என்பதை சொல்லாமல் இழுத்தடித்து வருகிறது. அப்படி தமாகா, பாஜகவில் கரைந்தால் எஞ்சியிருக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் தாய்வீடான காங்கிரஸுக்கு ஓடிவிடுவார்கள். தலைமை மட்டும்தான் பாஜகவில் இருக்கும் என்பது கள யதார்த்தம்.

  கூட்டணியில் ரஜினிகாந்த்

  கூட்டணியில் ரஜினிகாந்த்

  அடுத்ததாக ரஜினிகாந்தை எப்படியாவது களத்தில் இறக்கிவிடுவது என்பது பாஜகவின் திட்டம். ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என கணக்குப் போடுகிறது பாஜக.

  ஒருங்கிணைந்த அதிமுக

  ஒருங்கிணைந்த அதிமுக

  அதேபோல் அதிமுகவை ஒட்ட வைக்கும் முயற்சிகளையும் படுதீவிரமாக யோசிக்கிறது அக்கட்சி. ஒரு வலிமையான தலைமையின் அதிமுக இருந்தால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகள் கிடைக்கும். தமிழகத்திலும் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிடும் என கணக்குப் போட்டு 'இலவு' காத்திருக்கிறது பாஜக.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Sources said that BJP will try the formula with TMC, Rajinikanth and United ADMK for Tamilnadu Assembly Elections.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more