ஒன்னா இருந்தா நல்லாருக்கும்! எங்களுக்கும் ஆசைதான்! உடைத்துப் பேசிய பாஜக ‘தலை’! கேட்குமா ‘இரட்டை இலை’
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக நீண்ட நாட்களாக ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பாஜக அவர்களை ஒன்றாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக யூகங்கள் உலாவி வந்த நிலையில், அதனை உண்மையாக்கும் வகையில் பாஜக 'முக்கிய' தலைவர் பேசியிருப்பது தான் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போர்க்கொடி தூக்க.. முடியவே முடியாது என பேசினார் ஓபிஎஸ்.
ஆனாலும் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மோதல்
யாருக்கு அதிகாரம் என தீர்மானித்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக மாறி மாறி தீர்ப்புகள் வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் இருவரின் அரசியல் எதிர்காலமே இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தங்கள் தரப்புக்கு தான் சாதகமாக தீர்ப்பு வரும் என இரு தரப்புமே தீர்மானமாக இருக்கும் நிலையில் காலத்தின் கைகளில் தான் எல்லாமே உள்ளது. அதே நேரத்தில் 'எல்லாத்தையும் மேல இருக்குறவர் பாத்துப்பார்' என நம்பிக்கையில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

பாஜக பேச்சுவார்த்தை
ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக மேலிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இரட்டை தலைமையை ஏற்றுக் கொண்டால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய தயார் என ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டினாலும், விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி. ஓபிஎஸ் இல்லாமலேயே கட்சியை தன்னால் வழி நடத்த முடியும் எனவும், வரும் தேர்தலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என கூறி வருகிறார்.

மக்களவை தேர்தல்
ஆனால் இதனை பாஜக தலைமை விரும்பவில்லை. கடந்த தேர்தலைப் போல தமிழகத்தில் பலத்த அடியை பெற விரும்பாத பாஜக தலைவர்கள் இந்த முறை கவுரமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். 2024ஆம் ஆண்டு தான் தேர்தல் என்றாலும் தற்போதே பல பாஜக மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். பாஜக அதிமுகவையே நம்பி இருக்கும் நிலையில் இருவரின் உரசலால் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள பாஜக தலைமை இருவரை ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிடி ரவி
இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசியுள்ள பாஜக முக்கிய தலைவரும், தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக இருக்கும் சி.டி.ரவி வெளிப்படையாக இதுகுறித்து பேசியுள்ளார். அதில்,"அதிமுகவில் நிலவி வரும் அதிகார மோதல் அவர்களின் உள்கட்சி விவகாரம். அதில் தலையிட பாஜக விரும்பவில்லை. அதே நேரத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறது.. கோஷ்டிகளுடன் அல்ல. கட்சியை யார் வழிநடத்துவது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை" என கூறியிருக்கிறார்.

கேட்பாரா எடப்பாடி?
அதிமுக அதிகார மோதல் காரணமாக பிரிந்துள்ள துரதிஷ்டவசமானது என்பதோடு, அனைவரும் ஒன்றாக இருந்தால் இன்னும் பலம் கிடைக்கும் என பாஜக தலைமையின் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக பேச்சைக் கேட்க ஓபிஎஸ் தயாராக இருக்கும் நிலையில் எடப்பாடி கேட்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக தனித்துப் போட்டியிட விரும்புல் ஆவலை எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications