மாணவர்களுக்கு இனி சுட சுட உப்புமா, பொங்கல், கிச்சடி.. காலை உணவுத் திட்டத்தின் மெனு என்ன? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலை உணவுத் திட்டத்தின் மெனுவை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 2022 முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலமாக 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்தனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலும் கொண்டு வர அந்தந்த அரசுகள் முயற்சித்து வருகின்றன. தற்போது தவெக ஆட்சியில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றி முதல்வர் விஜய் அறிவித்தார். அத்துடன் காலை உணவுத் திட்டத்தை 8ஆம் வகுப்பு வரையிலும் விரிவாக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக ரூ.217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை விஜய் தொடங்கி வைத்துள்ளார். திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பொங்கல் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து விஜய் சாப்பிட்டார். இதன் மூலமாக 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காலை உணவுத் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்ற பட்டியல் வெளி வந்துள்ளது. அதன்படி திங்கட் கிழமை உப்புமா, செவ்வாய்க் கிழமை கிச்சடி, புதன் கிழமை பொங்கல், வியாழக் கிமை உப்புமா, வெள்ளிக் கிழமை இனிப்பு வகை உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
