சென்னையில் தொழிலதிபர் கொலை.. கையை கட்டி பிளாஸ்டிக் பையில் உடல் கண்டெடுப்பு.. ஷாக்
சென்னை : சென்னை விருகம்பாக்கம் அருகே தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மர்ம நபர்கள் வீசிச்சென்ற நிலையில் நேற்று இரவு அவரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது
சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலைக்கு அருகே உள்ள காளியம்மன் தெரு பகுதியில் பெரிய கழிவு நீர் கால்வாய் ஓடுகிறது. இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொடூர கொலை
அப்போது கால்வாயையொட்டிய மெயின் ரோட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இது பற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மநபர்கள்
இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். முதியவரான இவரை மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்து பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி கால்வாய் பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களும் இருக்கிறது. கொலையான முதியவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து அறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தொழிலதிபர்
விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பதும் 67 வயது மதிக்கத்தக்க அவரை கொலையாளிகள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலையாளிகள் வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு உடலை விருகம்பாக்கம் பகுதியில் வீசி சென்று உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகள் யார்?
முதியவர் பாஸ்கரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கடத்தி கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பாஸ்கரனுக்கு விரோதிகள் யார்-யார்? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications