இது பெஸ்ட்.. கபசுரக் குடிநீர் அனுப்புங்க! தமிழ்நாடு அரசை அணுகும் மத்திய அரசு! நாடு முழுக்க விநியோகம்
சென்னை: சீனாவில் பரவி வரும் கொரோனா இந்தியாவையும் தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மூலிகை மருந்தான கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் விநியோகிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்காக கபசுரக் குடிநீர் சூரணத்தை தமிழகத்தில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்வது குறித்தும் தமிழக அரசு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த முறை இந்தியாவை கொரோனா அலைகள் தாக்கிய போது, தமிழகத்தை பாதுகாப்பு கேடயமாக நின்று கபசுரக் குடிநீர் காப்பாற்றியதை மத்திய அரசு பார்த்து வியந்துள்ளது.

கொரோனா பீதியில் இந்தியா
சீனாவில் கொரானோ பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் உலக நாடுகள் உஷார் ஆகியுள்ளன. குறிப்பாக, சீனாவுக்கு மிக அருகே அமைந்திருப்பதால் இந்த விஷயத்தை இந்தியா மிக எச்சரிக்கையாகவே அணுகுகிறது. மேலும், சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றுகள் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. முகக்கவசம் அணிதல், விமான நிலையங்களில் கொரோனா சோதனை என 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலைமையை, இந்தியாவில் படிப்படியாக பார்க்க முடிகிறது.

"மாஸ்" காட்டிய கபசுரக் குடிநீர்
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்த போது, அந்தந்த மாநிலங்களில் பாரம்பரியாக கிடைக்கும் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்டு மருந்துகளை மக்கள் அடிக்கடி எடுத்துக்கொண்டனர். ஆனால், அவை எல்லாவற்றையும் விட தமிழகத்தில் விளையும் மூலிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுரக் குடிநீர் அதிக அளவில் பலன்களை கொடுத்தது. இதை பார்த்த அலோபதி மருத்துவர்கள் கூட, கொரோனா காய்ச்சல் வந்தவர்களை கபசுரக் குடிநீரையும் குடிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் தமிழக அரசின் டாம்கால் நிறுவனமே கபசுர சூரணத்தையும், பொடியையும் அதிக அளவில் தயாரித்து விநியோகம் செய்தது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் அலை ஏற்பட்ட போது, அதில் இருந்து மக்களை காப்பாற்றியது கபசுரக் குடிநீர்தான் எனக் கூறினால் அது மிகையாகாது.

இந்தியா முழுவதும் விநியோகிக்க..
சித்த மருத்துவ முறையில் உருவாக்கப்பட்ட கபசுரக் குடிநீர், ஆங்கில மருத்துவத்துக்கே சவால்விட்ட கொரோனா வைரஸை ஓட ஓட விரட்டியதை நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் பார்த்தனர். மேலும், மத்திய அரசும் கபசுரக் குடிநீரின் பயன்களை உன்னிப்பாக கவனித்தது. இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படக்கூடும் என கருதப்படுவதால், கபசுரக் குடிநீர் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியிருக்கிறது. கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் விநியோகிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை
இதற்காக, கபசுரக் குடிநீரை டன் கணக்கில் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசிடம் இருந்து கபசுர சூரணத்தை வாங்குவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கபசுரக் குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், ஆடாதொடா இலை, கற்பூரவல்லி இலை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் உள்ளிட்ட 15 மூலிகைகள் இடம்பெற்றுள்ளன. எந்த பக்க விளைவுகளையும் இது ஏற்படுத்துவதில்லை. எனவே, இதை நாடு முழுவதும் விநியோகிப்பது குறித்து தமிழக அரசிடம் பேச்சுவார்ததை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications