உருவாகும் சக்கரம்.. 2 நாள் 18 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னை நிலவரம் என்ன? வெதர் அப்டேட்
சென்னை: புதிதாக உருவாகும் சக்கரம் பற்றியும், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னை நிலவரம் குறித்தும் வெதர்மேன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை கொட்ட தொடங்கியது. ஆரம்பம் முதலே வெளுத்து வாங்க தொடங்கியது. நவம்பர் துவக்கத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக சென்னை, டெல்டா மாவட்டமான மயிலாடுத்துறையில் வரலாறு காணாத அளவில் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு நவம்பர் மத்தியில் பல இடங்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது.
டெல்டா மாவட்டங்களில் விடியவிடிய கனமழை.. பல ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது.. விவசாயிகள் கவலை

மிதமான மழைக்கு வாய்ப்பு
தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யாத நிலையில் இதமான சூழல் நிலவி வருகிறது. சில மாவட்டங்களில் வறண்ட வானிலையையே நிலவி வருகிறது. இருப்பினும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி இன்று தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

வெதர்மேன் ட்விட்
இந்நிலையில் தான் தமிழக வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை நிபுணரான வெதர்மேன் பிரதீப் ஜான் பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தமிழக மழை நிலவரம் பற்றியும், சென்னை வானிலை குறித்தும் சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

சென்னை முதல் நாகை வரை
அடுத்த 2 நாட்கள் தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளது. கிழக்கு திசை காற்றால் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மேற்கு, தெற்கு மாவட்டங்களில் மழை
அதன்படி தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களாக உள்ள ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் நாமக்கலில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பெய்யலாம். தென்தமிழக மாவட்டங்களை பொறுத்தமட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழையானது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் பெய்யலாம். இருப்பினும் அனைத்து இடங்களிலும் ஒருசேர மழை இருக்காது. சில இடங்களில் மழை பெய்யலாம். சில இடங்களில் ஒரு துளிகூட விழாமல் போகலாம்.

உருவாகும் சக்கரம்
மேலும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் சக்கரம் (காற்று சுழற்சி) உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். இது 3 முதல் 4 கட்டங்களாக MJO (Madden-Julian Oscillation) நகர்ந்து பெயர் பெற வாய்ப்புள்ளது. சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும். தற்போதைய சக்கரம் ITCZ இலங்கைக்கு கீழ் சென்றால் தமிழகத்திற்கு மீண்டும் மழை வர வாய்ப்புண்டு. இருப்பினும் இது இந்திய பகுதிக்கு வர இன்னும் காலம் இருப்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என கூறியுள்ளார்.