போராடும் விவசாயிகள் வன்முறையாளர்களா?.. சிக்கலில் சென்னையின் பிரபல பள்ளி நிர்வாகம்
சென்னை: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை வன்முறையாளர்கள் என்று குறிப்பிட்டு சிபிஎஸ்இ பள்ளி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இதுவரை மத்திய அரசு அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், சிலர் செங்கோட்டைக்குள் நுழைந்ததால் அங்கு வன்முறை வெடித்தது.

சர்ச்சையில் பள்ளி நிர்வாகம்
இந்நிலையில், குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை "குற்றவாளிகள்" மற்றும் "வன்முறை வெறி பிடித்தவர்கள்" என்று வினாத்தாளில் குறிப்பிட்டதையடுத்து சென்னையில் உள்ள முக்கியமான சிபிஎஸ்இ ஒன்று பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி
இந்த வாக்கியங்கள் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுத் தாள் மற்றும் இலக்கியத் தாளில் கேட்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள DAV ஆண்கள் பள்ளியில் இதுபோன்று கேட்கப்பட்டிருப்பதற்காக நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடந்திருக்கிறது.

வெறுப்பு
தேர்வுத் தாளில் குறிப்பிடப்பட்டிருந்த கேள்வி பின்வருமாறு: "குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியவர்கள், பொதுச் சொத்துகளை அழித்து, பட்டப்பகலில் போலீஸ் பணியாளர்களைத் தாக்கிய மோசமான வன்முறையானது, குடிமக்களின் இதயங்களில் கண்டனத்தையும் வெறுப்பையும் நிரப்பியது.

தடுப்பது எப்படி?
இதுகுறித்து, உங்கள் நகரத்தில் ஒரு தினசரி செய்தித்தாளின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள், இதுபோன்ற கொடூரமான, வன்முறைச் செயல்களைக் கண்டித்து, எழுத வேண்டும். பொது சொத்துக்களை அழித்தல், தேசியக் கொடியை இழிவுபடுத்துதல் மற்றும் காவல்துறையினரைத் தாக்குவது ஆகியவை சட்டவிரோத குற்றங்கள். அவை எந்தவொரு காரணத்திற்காகவும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. தூண்டுதலின் பேரில் நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறை வெறி பிடித்தவர்களைத் தடுக்க சில நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கு வேண்டும்" என்று அந்த கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது.