அன்பில் மகேஷுக்கு இனி வீட்டில் சமைத்த உணவு தரலாம்! ஆனால் அதன் தரத்திற்கு மகேஷே பொறுப்பு! நீதிபதி
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: "விசாரணை கைதிகளுக்கு உடல்நலனுக்கு ஏற்றாற் போல் உணவு உள்ளிட்ட வசதிகளை பெற அனைத்து உரிமைகளும் உள்ளன. எனவே அன்பில் மகேஷுக்கு அவரது உடல்நலனுக்கேற்ப சிறையில் தனியாக உணவு சமைத்து கொடுக்கலாம்.
இல்லாவிட்டால் அவருக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்கலாம். ஆனால் வீட்டில் சமைத்து கொண்டு வரும் உணவின் தரத்திற்கு அன்பில் மகேஷே பொறுப்பு என புழல் சிறை கண்காணிப்பாளர் உத்தரவாதம் பெற வேண்டும். மேலும் அன்பிலுக்கு தேவையான மருந்து, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
என்ன வழக்கு?
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த போது முறைகேடாக பணம் வசூலித்ததாக புகாரின் பேரில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரது வீட்டில் கடந்த மாதம் 16ஆம் தேதி ரெய்டு நடத்தியிருந்தனர்.
தலைமறைவாக இருந்த முத்துக்குமார்
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் தலைமறைவாக இருந்த நிலையில் அவர் குறித்தும் மோசடி குறித்தும் அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டும் என சிசிபி (மத்திய குற்றப்பிரிவு போலீஸார்) முடிவு செய்திருந்தனர். அதன்படி அவரிடம் கடந்த மாதம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 250 கேள்விகள் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
முன்ஜாமீன் கோரிய அன்பில் மகேஷுக்கு ஏமாற்றம்
இந்த நிலையில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதால் அன்பில் மகேஷ் , முன்ஜாமீன் கோரினார். ஆனால் அவரது முன்ஜாமீன் மனு கடந்த 26-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அன்பில் மகேஷை சிசிபி போலீஸார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
முதல் வகுப்பு சிறையில் அன்பில் மகேஷ்
அங்கு அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்க வேண்டும், உடல்நலனுக்கேற்ப கொழுப்பு குறைந்த புரதச் சத்து குறைந்த உணவு பொருளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
5 நாளில் 3 கிலோ எடை குறைந்த அன்பில்
இந்த நிலையில் தனக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி உணவு வசதிகள் தரப்படவில்லை. இதனால் கடந்த 5 நாட்களில் 3 கிலோ எடை குறைந்துவிட்டதாகவும், இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அன்பில் தரப்பு, வீட்டில் சமைத்த உணவை அனுமதிக்க வேண்டும். தூங்கும் போது விளக்கை ஆன் செய்து டார்ச்சர் செய்வதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சப்பாத்தி சாப்பிட முடியலை- அன்பில் வேதனை
மேலும் சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தியையே தனக்கும் வழங்குவதால் அதை சாப்பிட முடியவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அன்பிலுக்கு வீட்டு உணவை வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உணவின் தரத்திற்கு அவரே பொறுப்பு என உத்தரவாதம் பெற வேண்டும் என புழல் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
