வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்புடன் கட்டப்பட்ட சர்ச்.. ஆச்சரியமளிக்கும் சென்னையின் சுவாரஸ்யங்கள்!
சென்னை: 17ம் நூற்றாண்டிலேயே வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்புடன் கட்டப்பட்ட சென்னையின் செயின் மேரிஸ் தேவாலயம் குறித்து அறிந்துகொள்வோம்.
Recommended Video
அதிகாலை முதலே பரபரப்பாகும் சாலைகள், சுர்புர் என்று செல்லும் வாகனங்கள், எங்கு பார்த்தாலும் மனித முகங்கள் என கான்கிரீட் காடுகளாக நிறைந்திருக்கும் சென்னை நகரம், பல பிரத்யேக வரலாற்றை தன்னகத்தில் வைத்துள்ளது. வெறும் பொழுதுபோக்கு தளங்கள் மட்டுமல்ல, புராதண இடங்களும் சென்னையில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும்.

அப்படி ஒரு ஆச்சரியம் தான் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் செயின்ட் மேரிஸ் தேவாலயம். கி.பி. 1600-ம் ஆண்டுவாக்கில் வணிகம் செய்வதற்காக இந்தியாக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தங்களின் வணிக மையங்களை நிறுவினர். குறிப்பாக, வணிகம் செய்வதற்கு ஏதுவாக கடற்கரை நகரங்களில் தங்கி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.
அந்த வகையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1639ம் ஆண்டு கட்டபட்டது. ஆங்கிலேயர்களால் முதல்முறையாக இந்தியாவில் நிறுவப்பட்ட இந்த கோட்டை, கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் இது ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது. கிட்டத்தட்ட முழு சென்னை நகரமும் இந்தக் கோட்டையைச் சுற்றியே அமைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக கோட்டையைப் பயன்படுத்தினாலும், அவர்கள் பல ஆண்டுகளாக கோட்டையில் பல பிரத்தியேகமான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்று தான் அழகிய செயின்ட் மேரி தேவாலயம். இந்த தேவாலயத்திற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது.
17ம் நூற்றாண்டிலேயே வெடிகுண்டு ப்ரூஃப் உடன் கட்டப்பட்ட முதல் கட்டிடம் தான் செயிண்ட் மேரிஸ் தேவாலயம். இதே தேவாலயத்தில் தான் ராபர்ட் கிளைவ் - மார்கரெட் மாஸ்கெலின் திருமணம் நடைபெற்றது. இந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளின் பதிவுகள் மற்றும் பழைய வெள்ளிப் பொருட்கள் ஆகியவை இப்போதும் கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேவாலயத்தின் வெடிகுண்டு தடுப்பு அமைப்பு குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் கூறுகையில், இந்த தேவாலயத்தின் தனிச்சிறப்பு அதன் அடர்த்தியான தடிமன் சுவர்கள் தான். தேவாலயத்தின் சுவர்கள் கிட்டத்தட்ட 4 அடி அகலம் கொண்டது. அதேபோல் மேற்கூரை கிட்டத்தட்ட 2 அடி தடிமன் கொண்டதாகும். இந்த வடிவமைப்பு தேவாலயத்தை குண்டுவெடிப்புகளில் இருந்து காப்பாற்றும். செங்கல் மற்றும் கற்களால் வளைத்து கட்டப்பட்டுள்ள மேற்கூரை வெடிகுண்டு தடுப்பு அமைப்பை கொண்டுள்ளதாக தேசாலயத்தின் கிடைத்த தகடுகள் மூலம் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே பிரச்னை இருக்கும் என்பதால் தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1678ல் தொடங்கப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமானம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளது. தேவாலயத்தின் உட்புறத்தில் ஆங்கிலேயர்களுக்கான நினைவுப் பலகைகள் இப்போதும் பார்க்க முடியும். தேவாலயத்தின் பலிபீடத்தில் ஓவியம் மற்றும் கலைநயமிக்க மரவேலைப்பாடுகள் இப்போதும் கவர்ந்து இழுக்கும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம், இன்று சென்னையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்று என்று குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications