ஜேப்பியார் நிலத்தை கஷ்டப்பட்டு மீட்ட திமுக.. கட்ட இருந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியை ரத்து செய்த விஜய் அரசு
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்ட சென்னை சர்வதேச விளையாட்டு நகரம் பணிகளுக்கான ஒப்பந்தத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது.

20 ஆண்டுகால ஆக்கிரமிப்பும் திமுக அரசின் நில மீட்பும்
செம்மஞ்சேரியில் உள்ள 91.4 ஏக்கர் அரசு மானாவாரி புறம்போக்கு நிலம், 1990-களில் இருந்து ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்தன. நிலத்தை முறைப்படுத்தித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நீடித்தது.
2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிமன்றத் தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 செப்டம்பர் மாதம் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து அதிரடி கள நடவடிக்கை மேற்கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, அரசுக்குச் சொந்தமான 91.4 ஏக்கர் நிலம் அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டது. பின்னர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைக்கப்பட்டு, மொத்த நிலப்பரப்பு 112 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது.
திமுக அரசின் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம்
மீட்கப்பட்ட இந்த 112 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்பை உருவாக்க திமுக அரசு முடிவு செய்தது.
இந்தியாவில் ஒரு விளையாட்டு வளாகத்திற்குள் முதன்முறையாக 1 கிலோமீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும் கொண்ட சர்வதேச படகோட்டம் மற்றும் நீர் விளையாட்டுத் தடம் அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.
நவீன உள்விளையாட்டு அரங்கங்கள், தடகள மைதானங்கள், விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு வசதியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
முதற்கட்டப் பணிகளுக்காக ₹205.89 கோடி மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஆர்.பி.பி இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. களத்தில் மண் பரிசோதனை, நிலத்தைச் சமன்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
பணி ஆணையை ரத்து செய்த தவெக அரசு: பின்னணி என்ன?
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட மற்றும் ஒப்பந்தம் கோரப்பட்ட முக்கிய பெருந்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மறுஆய்வுக் கூட்டத்தில், தற்போதுள்ள முதற்கட்ட வடிவமைப்பு எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது காமன்வெல்த் போட்டிகள் போன்ற மெகா சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்குப் போதுமானதாக இருக்காது எனக் கருதப்பட்டது. 112 ஏக்கர் நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தி, மேலும் பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த சர்வதேச விளையாட்டு வளாகமாக இதை மாற்றி வடிவமைக்க அரசு முடிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த விதிகளின்படி ஆர்.பி.பி இன்ப்ரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணி ஆணையை உடனடியாக ரத்து செய்து, களப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
அடுத்தகட்ட நகர்வு*
பணி ஆணை ரத்து செய்யப்பட்டது குறித்து ஆர்.பி.பி இன்ப்ரா நிறுவனம் பங்குச் சந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளது. தொடக்கப் பணிகளுக்காகக் கணிசமான தொகையை ஏற்கனவே செலவிட்டுள்ளதால், அரசின் இந்த உத்தரவால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கம் மற்றும் ஒப்பந்த விதிகளின் அடிப்படையிலான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அரசுத் தரப்பில் சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப விரிவான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்பின்னர் திருத்தப்பட்ட புதிய டெண்டர் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
