சென்னையில் இருந்து இன்று ஊருக்கு போறீங்களா.. போக்குவரத்து மாற்றம்.. போலீசார் முக்கிய அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று சில போக்குவரத்து மாற்றங்களை சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். அத்துடன் கனரக வாகனங்கள் சென்னைக்குள் நாளை அதிகாலை 2 மணி வரை நுழைய போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, நேற்று (12ம்தேதி) முதல் இன்று (13ம் தேதி) வரை, பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரியில் சி.டி.எச். சாலை அடைந்து பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுன்டானா அடைந்தும், திருவள்ளூர் மற்றும் பெரும்பதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டை இடது புறம் திரும்பி சென்னை வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணா நகர் 3வது அவென்யூ, 2வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்லலாம்.

புறநகர் பேருந்து நிலையம்
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது மெயின்ரோடு, 2 வது அவென்யு சாலை, எஸ்டேட் ரோடு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

சிறிய ரக வாகனங்கள்
வடபழனி நோக்கிச் செல்லும் சிறுரக தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே.நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இசிஆர் சாலை
தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகன ஓட்டுனர்கள் இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலை வழியாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு போக்குவரத்து கமிஷ்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.