கனிமொழி தலைமையில் சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா.. ஜன 13 முதல் 17 வரை.. சென்னை மக்கள் ஹேப்பி!
சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி ஜனவரி 13 முதல் 17 வரை நடக்கவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறும் என்றும், சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழாவை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் போது கடந்த 2007ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பின் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையின் போது சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறுகையில், ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெறும் வாய்ப்புள்ளது. தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு, சர்வதேச புத்தகக்க் கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 13 முதல் 17 வரை சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நடைபெற உள்ளது. ஏறு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கனிமொழி கூறுகையில், சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழாவை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
கலை நிகழ்ச்சியுடன் சேர்த்து உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். வழக்கம் போல் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications