1,000 புதிய ஏ.சி மின்சார பேருந்துகளை வாங்க வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து.. என்னாச்சு?
சென்னை: திமுக ஆட்சியில் சென்னைக்கு புதிதாக 1000 ஏ.சி மின்சார பேருந்துகளை வாங்க வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 1,000 ஏசி மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தது. தனியார் பங்களிப்புடன், ஜி.சி.சி எனப்படும் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில், 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர் வெளியிடப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்கு முன், கடந்த மார்ச் மாதம் இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்ததை அடுத்து, இந்த டெண்டரை திறக்கும் தேதி, பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த டெண்டரை, மாநகர போக்குவரத்து கழகம், நேற்று முன்தினம் ரத்து செய்துள்ளது.
அதேபோல சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, பயணிகளை அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அவர்களின் இருப்பிடங்களுக்கு இணைப்புப் போக்குவரத்து வசதியை வழங்கவும், 220 எண்ணிக்கையில், ஏசி சிறிய வகை தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்கவும், எம்.டி.சி திட்டமிட்டது.
மேலும், 7 மீட்டர் நீளமுள்ள 70 பேருந்துகளும்; 5 மீட்டர் நீளமுள்ள, 150 பேருந்துகளை இயக்கவும் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில், எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. இதனால், ஏசி சிறிய வகை மின்சார பேருந்துகள் சேவையை செயல்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, 1,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள் கொள்முதல் செய்ய, நிர்வாக ஒப்புதலை பெறாமலேயே, கடந்த ஆண்டில் டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. சில நிர்வாக காரணங்களால், அந்த டெண்டர், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில், உரிய நிர்வாக அனுமதி பெற்று, அரசாணை வெளியிட்டு, 1,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஏசி பேருந்துகள் கொள்முதலுக்காக, தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏசி பேருந்துகளை கொண்டு வருவோம். அதுபோல், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும், 220 ஏசி மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
