தீட்சிதர்களிடம் இருந்து அதிகாரம் பறிப்பு.. சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க புதிய குழு அமைப்பு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. கோயிலின் சொத்துகளை மீட்பது, வருமான கணக்குகளை முறையாக பராமரிப்பது, புராதனக் கட்டிடங்களை பாதுகாப்பது என பல்வேறு முக்கிய பொறுப்புகள் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதேநேரத்தில், அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கடந்த 2014-ம் ஆண்டு கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராக இருப்பார். பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
