"அதென்ன கன்னிப் பேச்சு.." சட்டசபையில் ஆதங்கப்பட்ட வானதி சீனிவாசன்.. கோவை மெட்ரோ பற்றியும் கோரிக்கை
சென்னை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் முன் வைத்த பல கோரிக்கைகளை ஏற்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கோயம்புத்தூர் நகரத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
மதுரையிலும், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவியோடுதான் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பட்ஜெட்டில் அறிவிப்பு
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளோம். மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளை துவங்குவதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளோம் என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

வானதி சீனிவாசன்
முன்னதாக தனது பேச்சின்போது வானதி சீனிவாசன் கோவை மெட்ரோ தவிர, மேலும், சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். முதல்முறை சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் கன்னிப்பேச்சு என சொல்லாமல் முதல்பேச்சு அல்லது அறிமுகப்பேச்சு என்று கூறினால் நாகரீகமாக இருக்கும் என்பது அதில் ஒரு முக்கிய கோரிக்கையாகும். கன்னி என்பது பெண்ணின் இளம் பருவத்தை குறிக்கிறது எனவே அவ்வாறு சொல்ல வேண்டாமே என்றார் வானதி சீனிவாசன். இவர் பாஜகவின் மகளிரணி தேசிய தலைவர் பதவியிலும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

முதல் வேளாண் பட்ஜெட்
மேலும், 2011ம் ஆண்டு கர்நாடக சபையில் பாஜக அரசு முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. எடியூரப்பா அரசுதான் நாட்டிலேயே முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது என்று குறிப்பிட்டார் வானதி சீனிவாசன்.

உதயநிதி ஸ்டாலின் முதல் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இன்று சட்டசபையில் தனது முதல் பேச்சை பதிவுசெய்தார். எப்போதுமே ஒரு சட்டசபை உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் முதல்முறையாக பேச்சை பதிவு செய்யும்போது, கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுகிறார்கள். இன்று, உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சும் கன்னிப்பேச்சு குறிப்பிடப்பட்டு பல உறுப்பினர்களால் பாராட்டப்பட்ட நிலையில் கன்னிப்பேச்சு என்ற சொல்லாடல் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் வானதி சீனிவாசன்.
Recommended Video

பாரதியார் பூங்கா
இதனிடையே, கோவையில் மத்திய சிறையை அகற்றிவிட்டு பாரதியார் பூங்கா அமைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை முன் வைக்க, அதை ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications