‛‛சர்வாதிகாரம்’’.. ஆடு மாடுகளை போல் வண்டியில் ஏற்றிய போலீஸ்.. ஸ்டாலின் மீது கோபப்பட்ட ஜெயக்குமார்
சென்னை: திமுகவின் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். ஆடு, மாடுகளை போல் வண்டியில் போலீசார் ஏற்றினார்கள். சட்டசபை என்பது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக உள்கட்சி பூசல்களால் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார்.
அதோடு சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஆர்பி உதயக்குமாருக்கு, எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் வழங்கப்பட்டது.

சட்டசபையில் கோஷம்
மேலும் ஆர்பி உதயகுமாருக்கு சட்டசபையில் முன்வரிசையில் இடம் ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மீது அப்பாவு முடிவு எடுக்கவில்லை. மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையும் மாற்றம் செய்யப்படவில்லை. இதனை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. இதற்கிடையே தான் நேற்று 2வது நாள் சட்டசபை கூட்டத்தின்போது பேச அனுமதிக்காததை கண்டித்து, அதிமுகவினர் கூச்சல் குழப்பம் செய்தனர். கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் சபை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

தடையை மீறி உண்ணாவிரதம்
இதனை கண்டித்தும், சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியும் அதிமுக சார்பில் இன்று ஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டனர். தடையை மீறிய செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்பட 750 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சர்வாதிகார போக்கில் திமுக
அதன்பிறகு இன்று மாலையில் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது: திமுகவை பொறுத்தமட்டில் ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பது இல்லை. சர்வாதிகாரமான போக்கு தான் உள்ளது. மக்களுக்கு மதிப்பு அளிப்பது இல்லை. எங்களின் ஆட்சி காலத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கொடுத்து நாகரீகமாக நடந்து கொண்டோம். ஆனால் திமுக அப்படி நடந்து கொள்வது இல்லை.

அறவழியில் உண்ணாவிரதம்
ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது சட்டவிரோதமா? மகாத்மா காந்தியே உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் நடத்தினார். அதேபோல் நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழி போராட்டத்தை மகாத்மா காந்தி முன்னெடுத்தார். அதேபோல் தான் நாங்களும் அறவழியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டோம். அனுமதி தரப்படவில்லை.

ஆடு மாடு போல்..
காலை 9 மணிக்கு இன்று எழுச்சியாக ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து வலுக்கட்டாயமாக ஆடு மாடு போன்று வண்டியில் ஏற்றி சென்றார்கள். ஆடு மாடு போல் பஸ்சில் தள்ளினர். பத்திரிகையாளர்களை பேட்டி காணவும் போலீசார் அனுமதி மறுத்தனர். திமுக நான்காம் தூணையும் மதிப்பது இல்லை.

அறிவாலயமாக மாறிய சட்டசபை
தமிழக சட்டசபை என்பது தற்போது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் உள்ளது. மக்கள் பிரச்சனையை சொல்பவர்களுக்கு இடமில்லை. திமுக சட்டசபையில் மக்கள் பிரச்சனையை விவாதித்ததே இல்லை'' என கடுமையாக விமர்சனம் செய்தார்.











Click it and Unblock the Notifications