தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த சண்முகம் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை : தனது குரல் வளத்தால் ஈர்த்த மூத்த டிவி தொகுப்பாளரும், தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவருமான மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்கிற சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை குன்றியதால், சிகிச்சை பெற்று வந்த சண்முகம், சிகிச்சை பலனளிக்காமல் 10ஆம் தேதி மாலை காலமானார்.
அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு ஊடகவியலாளர்கள், நேயர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தொகுப்பாளர் சண்முகம்
முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் தனது கணீர் குரலில் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சண்முகம். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், பத்திரிகை நிருபராக தனது ஊடகப் பணியைத் தொடங்கி செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். இவரது குரல்வளம், தமிழ் வளம் காரணமாகவே, பலரும் பிடித்த தொகுப்பாளராக இருந்தார்.

சண்முகம் மரணம்
பின்னர், மற்றொரு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வந்தார் சண்முகம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை குன்றியதால், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 10ஆம் தேதி மாலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு ஊடகவியலாளர்கள், நேயர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி வாசிப்பின் இலக்கணம்
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் பலரும் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications