சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது இந்தியா.. "ஹிந்தி"யா அல்ல.. வடமொழியை தூக்கி பிடித்த அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழிகளாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு, கழகத் தலைவரும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கைஅவர்கள் வலியுறுத்தல்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் 'இந்தி திவஸ்' என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், "நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்" என்றும், "நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்.. ம்ஹூம்.. அரசுக்கு மக்கள் மீது அக்கறையே இல்லைங்க.. சொல்கிறார் வானதி மின் கட்டணம்.. ம்ஹூம்.. அரசுக்கு மக்கள் மீது அக்கறையே இல்லைங்க.. சொல்கிறார் வானதி

மொழியின் பெருமை

மொழியின் பெருமை

ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இதன் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியாவின் வரலாறு

இந்தியாவின் வரலாறு

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு.

தேசிய மொழி

தேசிய மொழி

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் இந்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக, 'உள்ளூர் மொழி'களையும் தனக்குக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

இந்தி பேசும் மாநிலங்கள்

இந்தி பேசும் மாநிலங்கள்

இந்தி பேசும் மாநிலங்கள் என சொல்லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழி அறிஞர்கள் ஆய்வுப்பூர்வமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த மொழிகளை மீட்க, உள்ளூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

அலுவல் மொழி

அலுவல் மொழி

அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண -இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ்மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை.

உள்ளூர் மொழிகள்

உள்ளூர் மொழிகள்

உள்ளூர் மொழிகள் மீது ஒன்றிய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் சமஸ்கிருதம் - இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதற்கு மாறாக, தேசியக் கல்விக் கொள்கை வழியாக இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கான முயற்சிகளிலேயே ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.

ஒருமைப்பாடு

ஒருமைப்பாடு

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை, உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் 'இந்திய மொழிகள் நாள்' எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
CM Stalin demands Union minister Amit Shah to make Tamil and 21 more regional languages has official language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X