சான்பிரான்சிஸ்கோ டூ சிகாகோ! முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு! எத்தனை கோடி முதலீட்டை ஈர்ப்பார்?
சென்னை: அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு 17 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அது போல் வெளிநாடு வாழ் தமிழர்களையும் அவர் சந்தித்து பேசினார். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்த அவர், அந்த நிறுவனங்களையும் பார்வையிட்டார். மேலும் தானியங்கி கார் ஒன்றிலும் முதல்வர் பயணித்த சம்பவம் நிகழ்ந்தது.
சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ 400 கோடியில் எலெக்டரோலைசர்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தவிர, 39 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், அவற்றில் பணிபுரியும் 26 லட்சம்பணியாளர்கள் என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்,உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்ஃபிங்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை,கோவை, மதுரையில் 4,100 பேருக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, ஆப்பிள், கூகுள்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்களை ஆகஸ்ட்30-ம் தேதி சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சான் பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் ஆகஸ்ட் 31-ம்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலெக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது.
இந்த நிலையில், எலெக்ட்ரோலைசர்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓமியம் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண் ராய்,தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு,ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலர்சொக்கலிங்கம் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கும் அவருடைய மனைவிக்கும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிகாகோவிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தொழில் முதலீட்டுக்கு தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார். பல்வேறு தொழிற்சாலைகளை அவர் பார்வையிடவும் செய்கிறார். வரும் 7ஆம் தேதி சிகாகோ வாழ் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications