விடாப்பிடியாக கோரிக்கை வைத்த டிஆர்பி ராஜா.. உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்! பூரித்துப் போன தஞ்சை
சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா என்னிடமே வாதாடினார் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி டி.ஆர். பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜா. இவர் மன்னார்குடி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவர் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருப்பார். மக்கள் நல பணிகளை யார் செய்தாலும் அவர்களை எந்த பேதமின்றி பாராட்டுவது, தவறு செய்தால் யாராக இருந்தாலும் தட்டி கேட்பது, உதவி என கேட்டால் உதவுவது என டிஆர்பி ராஜா குறித்த பட்டியல் நீளுகிறது.

மன்னார்குடி தொகுதி
அதே நேரம் தனது மன்னார்குடி தொகுதியை அனைத்து வகைகளிலும் முன்னேற்ற மின்னும் மன்னை திட்டத்தை முன்னெடுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி முதல் தனது தொகுதிக்கு உணவு பூங்கா வரை அனைத்தையும் அமைச்சர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் போதே கேட்டுவிடுவார்.

மன்னார்குடிக்காக நச்சரிப்பு
திமுக அரசு அமைந்த நாள் முதல் மன்னார்குடிக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு அமைச்சர்களை நச்சரித்து வருவதாக ஒன் இந்தியா தமிழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் டிஆர்பி ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசியிருந்தார்.

உணவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை
இதுதொடர்பாக உணவு துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ரூ.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்க; ரூ.894 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட; 44 ஆயிரம் குடும்பங்கள் பயனடைய ரூ.238 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்தார்.

முதல்வர் அறிவிப்பு
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக் கூடியவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசினார், அமைச்சரிடம் போராடினார், ஏன் என்னிடமே வாதாடினார். எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதியம் உயர்த்தப்படும் என்றார்.

எத்தனை பேர் பயன்
இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்த ஊதிய உயர்வால் 32,956 பேர் நேரடியாகவும் அவர்களை சார்ந்த ஏறத்தாழ 1,25,000 பேர் இன்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். தாயுள்ளத்துடன் நிறைவேற்றிய தலைவருக்கு (முதல்வர் ஸ்டாலின்) நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications