உதயநிதி.. நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம்.. வெகு விரைவில் அங்கீகாரம்.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன விஷயம்!
சென்னை : வருங்காலங்களில் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும், அவருக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். மாவட்ட செயலாளர்கள் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.
ஆனால், தலைமை இதற்கு வெளிப்படையாக எந்த ரியாக்ஷனும் காட்டாத நிலையில், தலைமையை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என உதயநிதியே வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் சற்று அமைதியாக இருந்து வந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்! ஆவலோடு விருப்பம் தெரிவிக்கும் அமைச்சர் முத்துசாமி!

உதயநிதி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை அமைச்சராக்கவில்லை. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உதயநிதி, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராக்க வேண்டும்
அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், திமுக கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, அரசு சார்பில் நடைபெற்ற விழாக்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என மீண்டும் திமுகவினரிடையே தீவிரமாகக் குரல்கள் எழுந்து வருகின்றன.

அமைச்சர்கள் குரல்
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்துச்சாமி உள்ளிட்டோர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனப் பேசினர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைவில் அங்கீகாரம் வழங்குவார் எனப் பேசி இருக்கிறார்.

ஒரே தலைவர் உதயநிதி
சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஓர் அணிக்கு செயலாளர் உண்டு என்றால், அது உதயநிதி ஸ்டாலின் தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது எனப் பேசியுள்ளார்.

வெகு விரைவில்
மேலும், இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து முன்னின்று செயலாற்றி வருகிறார் உதயநிதி. வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார். அவருக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார்." எனப் பேசியுள்ளார் சேகர்பாபு. உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதையே சேகர்பாபு வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறார்.