சிரஞ்சீவி நிலை தான் விஜய்க்கும்? தாக்குப் பிடிக்குமா தவெ கழகம்? புலம்பும் தொண்டர்கள்.. வந்த வார்னிங்
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என புலம்புகின்றனர் அக்கட்சி தொண்டர்கள். கட்சியின் தலைவர் விஜயா? புஸ்ஸிஆனந்தா? ஆதவ் அர்ஜுனாவா? அல்லது பிரசாந்த் கிஷோரா என்பதே தெரியாத அளவுக்கு அடுத்தடுத்த அறிவிப்புகள் வருவதாக கூறுகின்றனர். இப்படியே போனால் தமிழக அரசியலில் விஜய் தாக்குப் பிடிப்பாரா என்பது தெரியாது எனவும், அரசியலில் எம்ஜிஆர் ஆவதும், சிவாஜி ஆவதும் விஜய் கையில் தான் உள்ளது என்கின்றனர்.
நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய நிலையில் முதல் ஆண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைத்திருக்கிறது.

கட்சியின் மாநாட்டை தவிர பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் அரசியலில் விஜய் ஏற்படுத்தவில்லை. பரந்தூருக்குச் சென்றது மட்டுமே அவரது கட்சி செயல்பாடுகளில் முக்கியமானது. மற்றபடி மாணவர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, ட்விட்டர் அரசியல் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிந்தும் அதனையே செய்து வருகிறார்.
இந்த நிலையில் கட்சிக்கு வியூகம் வகுக்க ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி, இருக்கும் நிலையில் கடந்த காலங்களில் திமுகவுக்காக பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் சிடிஆர் நிர்மல் குமாரும் கட்சியில் சேர்ந்திருக்கிறார். இவரும் கிட்டத்தட்ட தேர்தல் வியூக நிபுணர் போல தான். தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமான தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சிக்கு பணியாற்றுவார் என கூறப்படுகிறது. ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருவரும் தோன்றி அதனை உறுதி செய்தும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்த குழப்பமான அறிவிப்புகளால் நிர்வாகிகள் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 40 முதல் 50 சீட்டுகளை பெற்று விடலாம் அதில் 10 பேர் ஜெயித்தால் கூட போதும் என்பது நிர்வாகிகள் கணக்கு. ஆனால் விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என தெரியவில்லை. கூட்டணி ஆட்சிக்கு தயார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அவர் வெளிப்படையாக அறிவித்தாலும் இதுவரை எந்த கட்சியும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணிக்கு வரவில்லை.
அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்வரா என்பதும் கேள்விக்குறி. இந்த நிலையில் விஜய் தனித்துப் போட்டியிடுவார் என பிரசாந்த் கிஷோர் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிப்பது போல் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் பேசுவது தான் கட்சியின் முடிவு, மற்றபடி ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்கள் என பேசுவது எல்லா கட்சியின் நிலைப்பாடு அல்ல என விளக்கம் அளித்து இருந்தார். பிரசாந்த் கிஷோரின் பேச்சு விஜய் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியதால் தான் ஆனந்தை வைத்து அறிக்கையை வெளியிட வைத்தார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஏசி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு ஐடியா கொடுத்து விடுவார்கள். ஆனால் களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். பல முதல்வர்களை உருவாக்கியதாக சொல்லும் பிரசாந்த் கிஷோரால் பீகாரில் படுதோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. அதிமுக மீதான அதிருப்தியால் தான் ஸ்டாலின் முதல்வரானார், சந்திரபாபு நாயுடு மீதான அதிருப்தியால் தான் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார்.
அதுபோல தான் அதிமுக திமுக அதிருப்தி வாக்காளர்கள் தான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிப்பார்கள். ஆனால் தனித்துப் போட்டி என்பது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான் என்பதை தொண்டர்களிடம் கேட்டு தலைமை தெரிந்து கொள்ள வேண்டும். வியூக வகுப்பாளர்களின் பேச்சை கேட்டால் சிரஞ்சீவி நிலைமை தான் ஏற்படும். பவன் கல்யாண் கூட தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வராகி இருக்கிறார்.
தமிழக அரசியலில் விஜய் தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் பல நிலவரத்தை புரிந்து கொண்டு கள அரசியலுக்கு திரும்ப வேண்டும். இன்னும் சினிமா சூட்டிங் மனநிலையிலேயே இருக்கக் கூடாது என்கின்றனர். மேலும் சிவாஜியும் கட்சி ஆரம்பித்தார், எம்ஜிஆரும் கட்சி ஆரம்பித்தார். பின்னர் நடந்தது என்ன என்பதை உலகமே அறியும் எனவே விஜய் அரசியல் நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications