மூன்று கோஷ்டி.. சமாதான முயற்சியில் காங்கிரஸ்.. 'பாப்கார்ன்' கொறித்து வேடிக்கை பார்க்கும் பாஜக!
சென்னை: காங்கிரஸின் சத்தியமூர்த்தி பவன் அலுவலக வாசலில், உட்கட்சி பூசல் காரணமாக, மூன்று கோஷ்டியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு, பெரும் அமளிதுமளி, இழுபறி, போராட்டத்துக்கு பிறகே 25 தொகுதிகள் கிடைத்தது. அதை வாங்குவதற்குள் மூச்சுமுட்டி, கே.எஸ்.அழகிரி கண்ணீரே விட்டுவிட்டார்.
சரி, தொகுதிகள் வாங்கியாச்சு என்றிருந்தால், இப்போது வேட்பாளர்கள் ரூபத்தில் அழகிரியை கட்டம் காட்டியுள்ளனர் காங்கிரஸார்.

சத்தியமூர்த்தி பவன்
இன்று மாலை அல்லது நாளை காலை தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொண்ட ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத், சென்னையிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று காலை வந்தார். அப்போது, திடீரென ஆதரவாளர்களுடன் அலுவலக வாசலிலேயே அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவங்களுக்கு ஏன் சீட்?
அப்போது பேசிய எம்.பி.விஷ்ணு பிரசாத், "காங்கிரஸ் யாருக்கு சீட் கொடுக்கும் என்று எனக்கு தெரியும். நான் உட்பட முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். கட்சியிலிருந்து வெளியேறி பின் மீண்டும் இணைந்தவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கின்றனர்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கன்ஃபியூஸ் ஆன மீடியா
இவர் அலுவலக வாசலில் போராட்டம் நடத்த, சிறிது நேரத்தில், இவர் கூட்டத்துக்கு எதிராகவே கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்தில், விஜயதாராணிக்கு சீட் கொடுக்கக் கூடாது மற்றொரு கோஷ்டி மற்றோரு ஓரமாக சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டம் நடத்த, 'யாரடா கவர் பண்றது' என்று ஊடகமே கன்ஃபியூஸ் ஆகிவிட்டது.

வெடித்த ஜோதிமணி
இதுகுறித்து ட்வீட் செய்த காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, "காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று ஆக்ரோஷமாக கொட்டித் தீர்த்துவிட்டார்.

சமரச பேச்சு
இந்நிலையில், பொறுத்தது போதும் என்று சத்தியமூர்த்தி பவன் விரைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தற்போது விஷ்ணு பிரசாத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கும் காங்கிரஸை, தமிழகத்தில் வீழ்த்த, பாஜக தேவையில்லை, அவர்களே போதும் என்ற பேச்சும் சந்தடி சாக்கில் அடிபடாமல் இல்லை.