அதிமுக தரப்பு ஆவேசமாக பதிலளிக்கும்போது கட் ஆகும் நேரலை.. ஆப் ஆகும் மைக்.. சட்டசபை முனுமுனுப்புகள்
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் பொன்முடிக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் பேசியபோது அடிக்கடி யூட்யூப் உள்ளிடவற்றில் நேரலை ஒளிபரப்பு தடைபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசிய நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசினார்.

கடும் வாதம்
"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ படிப்பில் சாதாரண கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். இதன் காரணமாக 800 மாணவர்கள் மருத்துவப் படிப்பினை படித்து வருகின்றனர்" என கே.பி.அன்பழகன் பேசினார்.

பொன்முடி ஆவேசம்
அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கின்றபோது தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது ஆளுநர் மாளிகையின் முன்னால் நடத்திய போராட்டத்தின் காரணமாக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கையெழுத்தாகி வந்தது என்பதை மறந்து விடாதீர்கள் என்றார்.

நேரலையில் சவுண்ட் கட்
அப்போது எழுந்து பேசிய தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கையெழுத்தாக காலதாமதம் ஆனது , ஆனால் தானே கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரத்தின் அடிப்படையில்... என பேசிய போதே நேரலையில் சவுண்ட் கட் செய்யப்பட்டது.

அன்பழகன் பதில்
தொடர்ந்து பேசிய தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இந்தியாவிலேயே இல்லாத ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் மாணவர்கள் பயன் பெற்றது அதிமுக ஆட்சி காலத்தில் தான் என்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இது குறித்து பேசினால் பெரிய விவாதம் ஆகி விடும் எனவும் சட்டப்பேரவை நேரம் கருதி அதனை தற்போது பேச வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது தொடர்ந்து பேசிய அன்பழகன் பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு குறித்து பேசினார். அதற்கு ஆவேசமாக பதிலளித்த பொன்முடி , கொண்டு வந்ததை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, அதன் பின் தமிழக முதல்வர் கருணாநிதி, அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை நியமித்து அதற்கு பிறகு தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது . ஆக செய்தது கலைஞர், கலைஞர், கலைஞர் என 3 முறை அழுத்தமாக தெரிவித்தார்.

நேரலை தீடீரென நிறுத்தம்
அப்போது அதிமுகவினர் கோபமாக பதிலளிக்க முயன்ற நிலையில், நேரலை தீடீரென நிறுத்தப்பட்டது. இதே மாதிரிதான்.. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கையெழுத்தை நான் போட்டேன் என்று பொன்முடிக்கு எடப்பாடி பதில் அளித்துவிட்டு வேறு ஏதோ சொல்ல முயன்றபோது மைக் ஒலி கட் செய்யப்பட்டது. கடைசியில் சில வரிகள் என்ன சொன்னார் என புரியவில்லை. வெளிப்படைத் தன்மைக்காக சட்டசபையிலிருந்து நேரலை என சொல்லிவிட்டு இப்படி குறிப்பிட்ட இடங்களில் கட் செய்வது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications