சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3வது அலை...எதிர்கொள்ள அரசு தயார் - விஜயபாஸ்கர் கேள்விக்கு மா.சுப்ரமணியன் பதில்

கொரோனா 3வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா.சுப்ரமணியன்,
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் தொடங்கியது.
முதலாவதாக திமுக எம்எல்ஏ உதயசூரியன் பேசினார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் பேசினார்.

Corona 3rd wave : TN government ready to face says Ma. Subramaniam

அதிமுக ஒரு எதிரி கட்சியாக அல்லாமல் பிரதான எதிர்க்கட்சியாக நல்ல பல திட்டங்களை வரவேற்றும், அரசுக்கு நல்ல கருத்துக்களை சுட்டிக்காட்டும் வகையிலும் சிறப்பாக செயல்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் நான் சில கருத்துக்களை எடுத்து வைக்கிறேன்.

எல்லோருடைய சிந்தனையும் போல் கொரோனா தொற்று நீங்க வேண்டும் என்ற கால கட்டத்தில் சட்டசபை கூடியுள்ளது. என்று தணியும் இந்த கொரோனா தொற்று என்ற கேள்விதான் மக்கள் மனதில் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனாவை களத்தில் நின்று எதிர் கொண்டு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுவது பொருத்தமாக இருக்கும்.

கொரோனாவுக்கு கடந்த ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்காத சூழ்நிலையிலும், அம்மா அரசு அதை திறம்பட எதிர்கொண்டது. அன்று வலுவான சுகாதார கட்டமைப்பை அம்மா அரசு சார்பில் உருவாக்கி காட்டினோம். போர்க்கால அடிப்படையில் செயல்பட்டோம். கொரோனா முதல் அலையை திறம்பட எதிர்கொண்டு பல உயிர்களை காப்பாற்றினோம்.

தேர்தல் கால கட்டத்தில் 26.2.2021 அன்று 481 இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தேர்தல் முடியும் காலத்தில் 26 ஆயிரத்து 480 என்ற அளவுக்கு உயர்ந்தது. இது ஆளும் கட்சிக்கு சவால்தான். இன்று 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. என்றாலும் இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சென்னையில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. எனவே இன்னும் கவனமாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனா 3வது அலை வரும் என்று எய்ம்ஸ் டைரக்டர் கூறியுள்ளார். 3வது அலை வருமா? என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். 3வது அலை வரும் என்ற எண்ணத்தில் அரசு செயல்பட வேண்டும். அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

2 லட்சம் குழந்தைகள் 3வது அலையின்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை வரும் என கணக்கிடுகிறார்கள். எனவே அரசு கூடுதலாக படுக்கைகளை உருவாக்க வேண்டும்.

நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்தாகும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் நிலைப்பாடு என்ன என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

இதற்கு பதில் அளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த அரசு கடந்த மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்கும்போது கொரோனா தொற்று 26 ஆயிரத்து 468 ஆக இருந்தது. 10 நாளில் 36 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது. முதல்-அமைச்சர் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. முதல்- அமைச்சராக தளபதி பதவி ஏற்ற அன்றே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

பின்னர் பிரதமரிடம் நேரடியாகவும் பேசினார். கடந்த 17-ந்தேதி பிரதமரை சந்தித்தபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். தமிழ்நாட்டில் தடுப்பூசி மையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 427 என்ற அளவுக்கு வேகமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாளில் கொரோனா தொற்று முற்று பெறும். முதல்வர் கோவைக்கு சென்றபோது தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கே சென்று கொரோனா பாதித்தவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினார்.

தடுப்பூசியை பொறுத்தவரை அடுத்த மாதம் 71 லட்சம் தருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும்.

கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் 2 ஆயிரத்து 510 பேரை தாக்கி உள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் இதற்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 130 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா 3வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது. தமிழகத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்துப் பேசினார்.

English summary
We do not think the Corona 3rd wave should come in Tamil Nadu. The Minister of Health has said that the government is ready to face it even if it comes as it is. Responding to a question raised by AIADMK MLA Vijayabaskar on corona prevention measures, Subramanian said,He also said that precautionary measures are being taken to prevent the 3rd wave of corona in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X