3 நாளுக்கு பிறகு.. சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்.. பற்றாக்குறையால் மக்கள் அவதி
சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் கொரோனா 2வது அலைக்கு பிறகு தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அந்த அளவிற்கு மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வரவில்லை. இதனால் அடிக்கடி தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

3 நாட்கள் நிறுத்தம்
இருப்பில் இருந்த தடுப்பூசிகள் 6ம் தேதி வினியோகிக்கப்பட்டது. 51,532 தடுப்பூசிகள் அன்றைய தினம் செலுத்தப்பட்டன. நேற்று 28,270 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதுவரையில் ஒரு கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 402 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறுகிறது அரசு புள்ளி விவரம். தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் மக்கள் வந்து ஏமாறக் கூடாது என்பதற்காக கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.

சிறிய அளவு தடுப்பூசிகள்
சென்னையில் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னைக்கு 12 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதனை தடுப்பூசி மையங்களுக்கு மாநகராட்சி அனுப்பியது. இதையடுத்து இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி 51 மையங்களில் தொடங்கியது. ஒவ்வொரு மையத்திற்கும் கோவேக்சின் 50, கோவிஷீல்டு 100 என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

டோக்கன்
ஒவ்வொரு மையத்திலும் குறைந்த அளவில் இருப்பு இருந்ததால் அதற்கான டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டது. தடுப்பூசி பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரைவில் டெல்லி செல்ல உள்ளார்.

இரண்டாவது டோஸ்
முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாவது தவணை நெருங்க உள்ளது. எனவே அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தற்போது கொரோனா தடுப்பூசி சப்ளை குறைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
