விஜய் எங்களுடன் வர வேண்டும்.. ஆரம்பித்த அதிமுக.. பின்னாலே ஆதரித்த பாஜக.. வேலையை தொடங்கிய எடப்பாடி!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகம் வர வேண்டும், அன்புச் சகோதரர் விஜய் இணைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு விடுத்திருந்தார். தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் எங்களுடன் விஜய் இணைய வேண்டும் என்று மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிமுக - பாஜக - தவெக கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கியுள்ள விஜய், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு விஜய்-க்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

எடப்பாடி விரும்பிய கூட்டணி
ஆனால் தவெக சார்பாக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுக்க, உடனடியாக அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. இந்த கூட்டணியில் இன்னும் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தவெக கூட்டணிக்கு வந்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ப விஜய்-யும் அதிமுக குறித்து இதுவரை எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.
கடம்பூர் ராஜூ அழைப்பு
அவரது அறிக்கையில் கூட அதிமுக என்ற பெயரை சில முறைகள் மட்டுமே கூறி இருக்கிறார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அதிமுக தேர்தலை அணுகுகிறது. அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும்.
வரவேற்ற நயினார் நாகேந்திரன்
அந்த நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், திமுகவை வீழ்த்த தவெக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜக தரப்பிலும் விஜய்-ஐ கூட்டணிக்கு வரவேற்று இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வேலையை தொடங்கிய எடப்பாடி
கடந்த சில மாதங்களாகவே அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கவும், கூட்டணி குறித்து கருத்து சொல்லவும் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகியான கடம்பூர் ராஜு விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைத்திருப்பது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் விஜய்-ன் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications