மாண்டஸ் புயல்: மிரட்டும் கடல் அலைகள்- முழு உஷார் நிலையில் மாவட்டங்கள்- சென்னை போலீஸ் அட்வைஸ்!
சென்னை: வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் முழு உஷார் நிலையில் உள்ளன. வங்க கடலில் பல அடி உயரத்துக்கு எழும் அலைகள் பொதுமக்களை அச்சப்படவைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது மாண்டஸ் புயல். சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல்.. 14 அடி உயரும் மெரினா அலைகள்.. பொதுமக்களுக்கு தடை! மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதம்

புதுவை, கடலூரில் மிரட்டும் அலைகள்
சென்னை போரூர் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீரினை தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட கொளத்துவாஞ்சேரி மதகின் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர், தாழங்குடா கடற்கரையில் பலத்த காற்றுடன் கடல் அலை 10 அடி வேகத்தில் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சீற்றத்துடன் வரும் அலைகள் சுமார் 15 அடி வரை உயர்ந்து காணப்படுகிறது.

மயிலாடுதுறை- மீனவர் குடியிருப்புகளில் கடல் நீர்
மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை பரவலாக நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கனமழை இருக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை ஒரு சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழையானது பெய்தது. தற்போது இரண்டாவது நாளாக தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றது. அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து பாறைகளில் தொடர்ச்சியாக மோதிய வண்ணம் உள்ளன. இதனிடையே தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி மீனவர் கிராமத்தில் நேற்று இரவு கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் தடுப்புகளை தாண்டி கடல் நீர் தற்போது உட்புகுந்துள்ளது. மேலும் மீனவர் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு கடும் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் மெல்ல மெல்ல குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையாமல் தடுக்க மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த தண்ணீர் ஓரளவு வடிய தொடங்கிய நிலையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தயார் நிலையில் திருவாரூர் மாவட்டம்
மாண்டஸ் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்டத்தில் நீர் தேங்கும் பகுதிகளாக தீர்மானிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்களை துரித கதியில் அமைத்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாண்டஸ் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். மழை மற்றும் புயல் நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் தகுந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 209 இடங்கள் அதிகளவு தண்ணீர் தேங்கும் இடங்களாக கருதப்பட்டு அந்த பகுதியில் ஒட்டுமொத்தமாக 249 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் குடிநீர் கழிவறை வசதிகள் ஆகியவை அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

வீடுகளை இழுத்து சென்ற கடல் அலைகள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்து ஆக்ரோஷத்துடன் கரைக்கு வந்து செல்கிறது. இந்த கடுமையான கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலைகளில் அடித்து சென்றுவிட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராம மக்கள் இரண்டாவது நாளாக இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலிலும் உஷார் நிலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மான்டஸ் புயல் எதிரொலியாக சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது . இந்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக நகர் பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தொடர் மழை காரணமாக இன்று இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது .

சென்னை போலீஸ் அட்வைஸ்
இதனிடையே சென்னையில் பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறுப் போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இருச் சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து மழை அங்கி அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.