ரஜினிக்கு விருது அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டதா.. கிளம்பியது சர்ச்சை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகளுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகாதா? என்கிற கேள்வியும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திரைத்துறை சாதனைக்காக நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விதிமீறல் இல்லை- ஜவடேகர்
அத்துடன் பிரகாஷ் ஜவடேகர் முடித்துவிடவில்லை.. தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெறுவதற்கும் இந்த அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விளக்கினார். அதாவது எங்கப்பன் குதிருக்கு இல்லை என்கிற கதைதான் இது என்பது அப்பட்டமான ஒன்று.

பாஜக நம்பிக்கையா?
வாக்குப் பதிவுக்கு முன்னதாக ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு விருது கொடுத்தால் ஒட்டுமொத்த தமிழக ஜனங்களும் அப்படியே பாஜகவுக்கு அலை அலையாக திரண்டு போய் வாக்க்களித்துவிடுவார்கள் என யாரேனும் அட்வைஸ் செய்தார்களா என்று தெரியவில்லை. இன்னொன்று மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் போது பிரதமர் மோடி வங்கதேச பயணம் சென்றார்.

மோடி பயணம் விதி மீறலா?
மேற்கு வங்கத்தில் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட மதுவா இன மக்கள் போற்றுகிற வங்கதேசத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கும் சென்றார் மோடி. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையத்துக்கு போனது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்.

பாஜக அரசின் நம்பிக்கை
நாட்டின் பிரதமர் அண்டை நாட்டில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றே தேர்தல் நடத்தை விதி மீறலா? இல்லையா? என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. ஆனால் வாக்குப் பதிவு நடக்கப் போகிற- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள ஒரு மாநிலத்தை சேர்ந்த நடிகருக்கு உயரிய விருது கொடுப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டது என கருதுகிறது மத்திய பாஜக அரசு.

ரஜினிக்கு விருது- விதி மீறலா?
ரஜினிகாந்த்துக்கு விருது அறிவிக்கப்பட்டவுடனேயே அனைத்துக் கட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டுப் போய் விட்டன.. இதுதான் அடுத்த கட்ட ஆச்சரியம். இந்த நிலையில் ரஜினிகாந்த்துக்கு விருது கொடுத்தது தேர்தல் நடத்தை விதி மீறலா இல்லையா என்ற புதிய விவாதம் கிளம்பியுள்ளது சமூக வலைதளங்களில்.