சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலக்கி, உலுக்கிய கன்னட "காந்தாரா"! சுடலை மாடன் வழிபாடுடன் பல ஒற்றுமை.. மிஸ் செய்த தமிழ் இயக்குநர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: "காந்தாரா.. "இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் காந்தம் போல ஒட்டிக்கொண்ட ஒரு பெயர். ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், அவரே கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்த இந்த கன்னட திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வரவேற்பை ஈட்டியுள்ளது.

படத்துக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும், இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு அதிலும் வெற்றி வாகை சூடிவிட்டது."ஸ்டோரி லைன்" சாதாரணமாக இருக்கலாம்.. ஆனால் மண்ணின் மக்கள் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த திரைக்கதை அமைப்பு மற்றும் பாத்திர தேர்வு, கதையின் நிலவியல் படத்தின் வெற்றிக்கு அச்சாணியாகிவிட்டது.

எப்போதும், வெட்டு குத்து, துரத்தி சென்று காதலிப்பது என்ற, ஸ்டீரியோ டைப் கன்னட சினிமாக்களில் இருந்து சமீபகாலமாக அந்த திரையுலகம் தனித்துவப்பட்டு வர ஆரம்பித்து இருக்கிறது. லூசியா, ரங்கஸ்தலம் போன்ற ரசிகர்களை தூங்கவிடாமல் உலுக்கிய படங்களை தொடர்ந்து, "காந்தாரா" (Kantara) அந்த லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

கர்நாடக அரசையே உலுக்கிய காந்தாரா திரைப்படம்! சாமியாடிகளுக்கு உதவி தொகை அறிவிப்பு! கர்நாடக அரசையே உலுக்கிய காந்தாரா திரைப்படம்! சாமியாடிகளுக்கு உதவி தொகை அறிவிப்பு!

சின்ன தாயி

சின்ன தாயி

மண்ணின் மனத்தோடு எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும், கிராம தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்து வெளியான திரைப்படங்கள் மிகவும் குறைவுதான். அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது காந்தாரா. தமிழகத்திலும் நாட்டார் தெய்வங்கள் என்று அழைக்கப்படக்கூடிய, குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் நிரம்பி இருக்கின்றன. ஆனால் அதை காட்சிப்படுத்திய இயக்குனர்கள் மிக மிக சொற்பம். கரகாட்டக்காரன், சின்ன தாயி போன்ற திரைப்படங்களை இந்த பட்டியலில் வைக்கலாம். சமீபத்தில் சொல்ல வேண்டுமானால், மாரி செல்வராஜின் கர்ணண் திரைப்படம், குடும்பங்களுக்குள் கடைபிடிக்கப்படும், கன்னி தெய்வத்தின் வழிபாட்டை காண்பித்தது. காந்தாரா காட்டி இருக்கும் பஞ்சுர்லி, குலிகா போன்ற கிராம தெய்வ வழிபாடுகள், கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படக் கூடியதாகும். பெரு தெய்வ வழிபாட்டில் இருந்து இது வேறுபட்டு இருப்பதுதான் ரசிகர்கள் விழிகளை அகலமாக திறக்க காரணம். தென் தமிழகத்திலும் இப்படியான காவல் தெய்வங்கள் அதிகம். அதை சின்னத்தாயி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில், சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். "கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி.." என்ற பாடலை யூடியூபில் இப்போது நீங்கள் பார்த்தாலும் கூஸ்பம்ப்ஸ் நிச்சயம். ஆனால் அந்த திரைப்படத்திலும், காந்தாரா போல, முழுமையாக அதை பயன்படுத்தவில்லை, இன்னும் களத்தை உள்வாங்கி படைத்திருக்கலாம் என்பதுதான் எதார்த்தம்.

சுழல் வெப்சீரிஸ்

சுழல் வெப்சீரிஸ்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல லட்சம் பக்தர்கள் ஒன்றுகூட கூடியது. ஆனால் அதை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தியது கிடையாது. 41 நாட்கள் கடும் விரதம் இருந்து காளி வேடம் அணிந்து உக்கிரமாக சாமியாடும் அவர்களை பற்றி , காந்தாரா மாதிரி எத்தனையோ திரைப்படங்களில் காட்டி இருக்க முடியும். ஆனால் காட்டப்படவில்லை. "சுழல் " வெப் சீரிஸ் இது போன்ற ஒரு வழிபாட்டு கலாச்சாரத்துடன் கதையை நகர்த்தியது. ஆனால் அது எந்த மண்ணின் வழிபாடு என்பதை புரிய வைப்பதில் பெரும் குழப்பம்தான் மிஞ்சியது. ஒரு பக்கம் குலசை தசரா போலவும் காட்சியளிக்கும், இன்னொரு பக்கம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் நிகழும் மயான கொள்ளை போலவும் அதை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நிலவியலை பார்த்தால் மலை வாசஸ்தலமாக இருக்கும். எனவே வழிபாடு சார்ந்த எந்த ஒரு பிணைப்பையும் சுழல் வெப்சீரிசால் கொடுக்க முடியவில்லை.

கிராம தெய்வங்கள்

கிராம தெய்வங்கள்

இதில் தான் காந்தாரா வித்தியாசப்படுகிறது. மண்ணின் கதையை, அதே நிலவியல், சூழ்நிலை , மொழி நடை, கதாப்பாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்வுடன் கலந்துள்ள வழிபாட்டு முறைகளுடன் கலந்து விருந்து படைத்துள்ளது. காந்தாராவில் காட்டப்படும் பஞ்சுர்லி (Panjurli Daiva ), குலிகா (Guliga Daiva) தெய்வ வழிபாட்டு முறைகள், உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாது வடக்கு கேரள மக்களின் வாழ்க்கை வழிபாட்டு முறையிலும் ஒத்துப் போக கூடிய விஷயமாக இருக்கிறது. மொழி பாகுபாடு இல்லாமல், அந்த மண்டலத்தின், கிராம தெய்வ இந்துக்களின் வழிபாட்டு முறை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால் வட்டாரங்களின் ஒற்றுமை இல்லாமலேயே தென் தமிழகத்தின் குலதெய்வங்கள் அல்லது காவல் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளில் நிறைய வே கர்நாடகாவின் இந்த மண்டல பகுதியில் உள்ள தெய்வ வழிபாட்டு முறையுடன் ஒத்துப் போகின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

சுடலை மாடன்

சுடலை மாடன்

தென் மாவட்ட காவல் தெய்வங்களில் மிகவும் பரவலாக அறியப்படுவது சுடலைமாடன். தனியாக கோவில் கொண்டு இருப்பார், அல்லது அம்மன் கோவில்களில் காவல் தெய்வமாகவும் இருப்பார். தென் மாவட்டங்களில் பெரும்பாலான மக்களுக்கு குலதெய்வமாக தனி கோவிலில் வீற்றிருந்து கொடை திருவிழாவை ஏற்றுக் கொள்ளும் தெய்வமாக இருக்கிறார். குலதெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்களுக்கு பெயர்கள் பல உண்டு. சுடலை மாடன் போலவே இந்த தெய்வங்களும் நள்ளிரவு நேரத்தில் சாமக்கோடையின்போது கையில் தீப்பந்தம் ஏந்தி காட்டுக்குள் வேட்டைக்கு செல்வார்கள். சுடலை மாடன் என்ற பெயரில் மட்டுமல்லாது முண்டன், சப்பானி மாடசாமி, பலவேசம், கட்டேறும் பெருமாள் என பல காவல் தெய்வங்கள் அந்த மக்களின் வழிபாட்டில் உண்டு.

கடவுள் வழிபாடு

கடவுள் வழிபாடு

நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதியான திசையன்விளை தாலுகா, குட்டம் கிராமத்தில் ஒத்த வீரேஸ்வரர் சுவாமி என்ற பெயரில் குலதெய்வம் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். ஆட்டுக்கிடா பலி ஏற்று சாமக்கொடை நேரத்தில், நள்ளிரவு கையில் தீ பந்தம் ஏந்தி வேட்டைக்கு செல்லும் சாமி இவர். "ஏய்.." என்ற பெரும் ஆங்கார சத்தத்துடன் சாமி வருவார். இதை உளி இறைதல் என்பர். இப்படியாக, சாமி பெயர்கள் வெவ்வேறாக வழங்கப்பட்டாலும், உணர்வுகளும் வழிபாட்டு முறைகளும் தென் தமிழக மக்களிடம் ஒரே மாதிரி ஒன்றி போயிருக்கின்றன.

தமிழக வழிபாட்டு முறையுடன் ஒற்றுமை

தமிழக வழிபாட்டு முறையுடன் ஒற்றுமை

காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும் தெய்வமும் தீப்பந்தத்தை கையில் ஏந்தி காட்டுக்கள் செல்லக்கூடியது தான். சாமி அருள் வந்து ஆடுபவரின் ஓங்கார சத்தம்.. ஆடும் போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் ஆகியவை தென் தமிழக சாமியாடிகளின் அருளாட்டத்துடன் ஒத்துப் போகின்றன. சாமி ஆடும் போது சாமியாடிகள், வானத்தை நோக்கி எரியும் பொரி போன்ற நடைமுறை தென் தமிழகத்திலும் உள்ளது, காந்தாராவிலும் காட்டப்படுகிறது. காந்தாரா திரைப்படத்தின், பெரும் ஈர்ப்புகளில் ஒன்று சாமியாடி எழுப்பும் ஓ.. என்ற ஆங்கார ஒலி. தென் தமிழக, குலதெய்வ, காவல் தெய்வம் சாமியாடுபவர்களும், இது போன்ற ஓங்கார சப்தமிடுவது வழக்கம்.

அடடே இவ்வளவு உள்ளதா

அடடே இவ்வளவு உள்ளதா

துளு நாடு தெய்வ வழிபாட்டு முறையில் சாமியாடிகளுக்கு முதலிலேயே அலங்காரம் செய்து விடுகிறார்கள். பிறகு பூஜை நடக்கும் போது சாமியாட்டம் வருகிறது. ஆனால், தென் தமிழக குலதெய்வ வழிபாட்டு முறையில் சாமியாட்டு வந்த பிறகே, அவர்களுக்கு சாமிக்குரிய அலங்காரங்களை செய்கிறார்கள். சுடலை மாடசாமி போன்ற வேட்டைக்கு செல்லும் வழிபாட்டு முறை கொண்ட காவல் தெய்வங்களுக்கான சாமியாடிகளுக்கும், பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் அங்கி குல்லா போன்றவை அணிவிக்கப்படும். நெற்றியில் சந்தனம், விபூதி பூசப்படும். பிறகு கையில் வல்லயம் கொடுக்கப்படும். சில சுடலைமாடசாமி கோவில்களில், கணியான்களும் கூட சேர்ந்து ஆடுவது உண்டு. காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும் கிராமிய கலைஞர்களும் முகத்தில் ஒப்பனை பூசிக்கொண்டு நடனமாடுவார்கள். இதேபோன்ற அலங்கார கலைஞர்களை கொண்ட கணியான் கூத்து என்ற பாரம்பரியமும் தென் தமிழகத்தில் அழியாமல் காக்கப்பட்டு வருகிறது. காந்தாராவில் ஆரம்பத்தில் வரும் "நீதிமன்ற படிக்கட்டு" காட்சிகளுடன், ஆறுமுகமங்கலம் சுடலை மாடன் தல பெருமை ஒத்துப்போகிறது. கோர்ட்டில் சாட்சியாக தோன்றியதால்தான் ஆறுமுகமங்கலம் சுடலை மாடன் சுவாமியை, ஐகோர்ட் மகாராஜா என்ற சிறப்பு பெயருடன் பக்தர்கள் அழைக்கிறார்கள். பஞ்சுர்லி, குலிகா போன்று பல நாட்டார் தெய்வங்கள் போல, தென் மாவட்ட குல தெய்வ கோவில்களிலும் பல தெய்வங்கள் ஒரே கோவிலில் வழிபடப்படுகிறார்கள். பிரதான தெய்வமாக ஒருவரும், பிற தெய்வங்களை பரிவார தெய்வங்களாகவும் வணங்குவது வழக்கம். இப்படி பல ஒற்றுமைகள் பின்னிப் பிணைந்து காணப்படுவது தான் பலரது பருவங்களை உயர்த்தி உள்ளது.

இதுகுறித்து ஆதிரைச்தித்தன் கூறுகையில், துளு பேசும் மக்கள் பூசிக்கும் அந்த பூசனைக்கு உரிய முகம் பஞ்சுருளி சில தமிழக பகுதி நாட்டார் கோயில்களின் உட்புறத்தில் தூண்களில் தொங்க விடப்பட்டுள்ளது என்கிறார். ராஜபாளையம் - அழிசோடை புழுகாண்டி கருப்பர் கோவிலில் இதுபோன்ற பன்றி வடிவிலான முகம் மரத்தால் ஆன ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

மேலும், பன்றி மாடன் என்பது மாடன் வழிபாட்டில் ஒன்று என்கிறார். சுடலை மாடன் வரலாற்று கதையில், பகவதி அம்மன் மகிழ்ந்து மாடனுக்கு விருந்து வைக்க 21 வடிவமாக மாடன் மாற 21 பந்தி ஏற்றதாய் வரலாறு.
அதில் ஒரு வடிவம் "பன்றி மாடன்" பன்றி ஊட்டு பரணில் கேட்டதால் இப்பெயர் என்பர் என்கிறார் இவர். ஊர் வேறாய் இருப்பினும் வேர் ஒன்று தான் என்பது இவரது கருத்து. கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்.. என்ற சுந்தரம்பிள்ளையின் கருத்து, நாம் எல்லோரும் ஒரே மாதிரி வழிபாட்டால் பிணைக்கப்பட்டுள்ளதையும் சேர்த்தே காட்டுகிறது. இதை காந்தாரா கண்ணாடி போல காட்டியுள்ளது.

இயக்குநர்கள் கவனத்திற்கு

இயக்குநர்கள் கவனத்திற்கு

இத்தனை ஒற்றுமைகள் இருந்தாலும், ஒரு கன்னட திரைப்பட இயக்குனர் தனது மண்ணின் கலாச்சாரத்தை அழகாக பிரதிபலித்ததை போல தமிழில் படைப்புகள் உருவாகவில்லை என்பது ஆதங்கமாக எஞ்சி நிற்கிறது. திறமை கொண்ட தமிழ் இயக்குனர்கள் இனிமேல் இந்த கோணத்திலும் யோசிப்பார்களா.. மக்களின் ஆன்மாவுடன் கலந்துள்ள விஷயங்களை சரியாகப் படைக்கும்போது அந்த படைப்புகள் மிகப்பெரிய அளவுக்கான அங்கீகாரத்தை பெறும் என்பதை காந்தாராவின் வரவேற்பை பார்த்த பிறகாவது நமது படைப்பாளிகளும் உணர்வார்களா..!

English summary
Kantara movie review in Tamil with a different angle: Kantara movie and South Tamil Nadu village Gods worships are looking similar. Will Tamil movie directors utilize Sudalai Madan Kpvil Kodai like worship cultures in Tamil movies? This article explains the importance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X