நாதகவால் டேமேஜாகும் விஜய்யின் இமேஜ்.. உணர்ந்து கொண்ட தவெக தலைமை.. கார்த்திகா கைதின் பின்னணி என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திகா திடீரென அதிகாலை கைது செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. இதன் பின்னணியில் நாதக நிர்வாகிகளின் பேச்சுகள் மற்றும் வீடியோக்களால் விஜய் மற்றும் தவெகவின் இமேஜ் பாதிக்கப்பட தொடங்கி இருப்பதால், இந்த கைது படலம் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அக்டோபர் 20ஆம் தேதி அதிகாலையில் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கார்த்திகா திடீரென காவல்துறையினரால் அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகா மட்டுமல்லாமல் அவரது கணவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாராபுரம் தொகுதியில் விஜய் ரோடு ஷோ நடத்திய போது திடீரென சாலையை மறித்ததால், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதன்பின் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கார்த்திகா உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. வெளியில் வந்த கார்த்திகா, முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
திடீரென நாதக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இடைத்தேர்தலுக்கு முன்பும், பின்னரும் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக முதல்வர் விஜய்யையும், தவெகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோரின் வீடியோக்கள் மக்களிடையே எடுபட தொடங்கி இருக்கிறது.
நாதக நிர்வாகிகள் வெளியிடும் வீடியோக்கள் விஜய்யிம் இமேஜ்ஜை டேமேஜ் செய்ய தொடங்கி இருக்கிறது. இதனை முன்பே அறிந்திருந்தாலும், தவெக தலைமை பெரிதாக நாதகவை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இனியும் விட்டால் நாதக கொஞ்சம் கொஞ்சமாக தவெகவின் வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என்று தவெக தலைமை உணர்ந்திருக்கிறது.
ஏனென்றால் நாதகவின் 4% வாக்குகளை தவெக கைப்பற்றி இருக்கிறது. அவர்கள் அதிருப்தி அடைந்தால் மீண்டும் நாதக பக்கம் நகரக்கூடும். இதனால் நாதகவை கட்டுப்படுத்தவே கார்த்திகா திடீரென கைது செய்யப்பட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் திடீரென அத்தனை அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்த எதிர்ப்பு தவெகவுக்கு சிக்கலாகி இருக்கிறது. இதனால் தவெகவின் அடுத்தக் கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
