மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரணம் - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் போது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மழை தீவிரமடைந்துள்ளதால் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறோர்.
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, துறைச் செயலர்கள், காவல் உயர் அதிகாரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க உள்ளனர்.
வங்கக்கடலில் வலுவடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக் கடப்பதால், சென்னை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோவை, நீலகிரி, நாமக்கல், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 5 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைகொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலைகளில் கிடக்கிறது. குறிப்பாக, வடசென்னைக்கு உட்பட்ட வியாசர்பாடி, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், கொளத்தூர், திருவிக நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
கனமழையின் காரணமாக வியாசர்பாடி முல்லை நகர் மேம்பாலம், ஜீவாநகர் கணேசபுரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மீண்டும் அப்பகுதிகளில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கன்னிகாபுரம், பட்டாளம், தட்டாங்குளம், கே.பி.பார்க், சூளை அங்காளம்மன் கோயில் தெரு, ஸ்டாரன்ஸ் ரோடு, பி.பி.ரோடு, அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜமாலியா, ஏகாந்திபுரம், குமரன் நகர், ஜவகர் நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ஜி.கே.எம்.காலனி, சிவஇளங்கோ சாலை பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக இந்த பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதிகம் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த 5 நாட்களாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நிவாரண உதவிகளையும் வழங்கினார். இந்த நிலையில் விடாமல் மழை வெளுத்து வாங்குவதால் பல இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்பதால் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது, துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது, நிவாரண முகாம்களை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, துறைச் செயலர்கள், காவல் உயர் அதிகாரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் , உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய தமிழக முதல்வர் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, மக்களுக்கு தரமான உணவு , மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.மேலும் துறை அலுவலர்கள், பயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கனமழையால் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவல் இருந்து வரும் நிலையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications