எச்சரிக்கையுடன் இருங்கள்.. உதவி தேவைப்பாட்டால் உடனே இதை செய்யுங்கள்.. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
சென்னை: இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்ய உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரக் காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாகக் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சென்னை மிகக் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்து. இதனால் நகரில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

சென்னை கனமழை
தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அண்ணாசாலை, சேப்பாக்கம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஒருபுறம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், மழை தொடர்ந்து பெய்வதால் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்கள்
இந்தச் சூழலில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கி நள்ளிரவைத் தாண்டி சுமார் 12 முதல் 14 மணி நேரத்திற்குச் சென்னை தொடங்கி கடலூர், டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியீடு
கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், "தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழ்நாடு, சென்னை, கிருஷ்ணா பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

குழந்தைகள்
உயிர்களை காக்கவும் உடைமைகளைக் காக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். இடி மின்னலுடன் கனமழை பெய்யும் பொது பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே விடக்கூடாது. குறிப்பாக நீர்நிலைகள் இருக்கும் இடங்களில் செல்லக் கூடாது. ரோடுகளில் இருக்கும் மின்கம்பங்களைத் தொடக்கூடாது. சாலைகளில் தேங்கியிருக்கும் நீரில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அலட்சியமாக இருக்கக் கூடாது.

வாகனங்கள், உடைமைகள்
கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது தாழ்வான பகுதிகளில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தேசம் அடைந்தன. எனவே வாகனங்களைச் சற்று உயர்வான இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். இடி மின்னல் மின்னும் போது டிவி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கீழ்த்தளத்தில் இருக்கும் மக்கள் டிவி போன்ற தங்கள் பொருட்களை மேற்தளத்தில் வைக்கலாம்.

உதவி எண்கள்
எதாவது சிரமம் இருந்தால் 100,101, 108, 112 ஆகிய எண்களில் தொடர்புகொண்டால் போலீசார் தேவையான உதவிகளைச் செய்வார்கள். மாநிலம் முழுவதும் அதிரடி வீரர்கள், நீச்ல் வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த 2 நாட்கள் விரைவில் கடந்த போகும். நாம் பாதுகாப்பாக இருப்போம்" என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தயார் நிலை
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போலீசார், ஆயுதப்படை காவலர்கள், சிறப்புக் காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல்படை என மொத்தம் 75 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர். அதில் 10 ஆயிரம் பேர் உயிர் காக்கும் பயிற்சி எடுத்தவர்கள். இதுதவிர 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படை, மீட்புப்படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications