அடிமடியில் கையை வைக்கும் தனுஷ்.. பெரும் கலக்கத்தில் விஜய்.. பக்கா பிளானோடு காய் நகர்த்துகிறாரே!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் நடிகர் தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' எனப் பெயர் மாற்றி, பெண்களுக்கான மாநாட்டைப் போல பிரம்மாண்ட மகளிர் அணி கூட்டத்தை நடத்திக் காட்டிய தனுஷ், தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்காக ஏசி (AC) மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய இலவச டியூஷன் மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அவரது நற்பணி இயக்கம் அறிவித்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் எளிய குடும்பத்து மாணவர்களை இலக்காகக் கொண்டு, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு வெளியானது முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் கூடாரத்தில் பெரும் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் வாக்கு வங்கியை குறிவைக்கிறாரா தனுஷ்?
தமிழக வெற்றிக் கழகத்தின் மிக முக்கியமான பலமே புதிய தலைமுறை வாக்காளர்களும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்து வரும் இளைஞர்களும்தான். விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் கல்வி விருதுகள் வழங்கி, மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நேரடியாக ஈர்த்து வந்தார்.
ஆனால் இப்போது தனுஷ், விஜய்யின் அந்த வியூகத்திற்கே செக் வைக்கும் விதமாக, ஒரே அடியில் 234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவசப் படிப்பகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். தனியார் பயிற்சி மையங்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய குடும்பங்கள் மத்தியில் இந்தத் திட்டம் மிகப்பெரிய ஆதரவை உடனடியாகப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தனுஷ் பக்கம் சாய வாய்ப்புள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது.
தவெக கூடாரத்திற்குள் ஏன் இவ்வளவு அதிர்ச்சி?
தவெக உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் இந்த விஷயம் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது. தவெக வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய விஷயங்கள்:
கடந்த தேர்தலில் தவெகவிற்கு கிடைத்த வாக்குகளில் கணிசமான பகுதி இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள். தனுஷின் கல்வி சார்ந்த இந்த நேரடி உதவி, அந்த இளம் வாக்காளர்களைத் தன்பக்கம் எளிதாக ஈர்த்துவிடும் என தவெக அஞ்சுகிறது.
வெறும் அரசியல் கூட்டங்கள் கூட்டுவதை விட, பிள்ளைகளின் படிப்பிற்கு நேரடியாக உதவும் நபரை குடும்பங்கள், குறிப்பாக தாய்மார்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். ஏற்கனவே மகளிர் அணியைக் கூட்டி பலம் காட்டிய தனுஷ், இப்போது கல்வித் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த குடும்ப வாக்குகளையும் கவரப் பார்க்கிறார்.
மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மத்தியில் விஜய் மட்டுமே இளைஞர்களின் ஒரே தேர்வாக இருந்தார். ஆனால், திரைத்துறையிலிருந்து தனுஷும் அதேபோன்ற சமூக நலத் திட்டங்களுடன் களமிறங்கும்போது, விஜய்க்கு இருந்த "ஒரே மாற்று" என்ற தனித்தன்மை உடையும் அபாயம் உள்ளது.
தனுஷின் அரசியல் கணக்கு என்ன?
அரசியல் நோக்கர்களின் பார்வையில், தனுஷ் சத்தமில்லாமல் மிகத் திட்டமிட்ட ஒரு களப்பணியைச் செய்து வருகிறார்:
காமாட்சி விளக்கு வழங்கி ஆயிரக்கணக்கான பெண்களைத் திரட்டியதன் மூலம் மகளிர் மத்தியில் ஆதரவு அலை உருவானது. 234 தொகுதிகளிலும் டியூஷன் மையங்கள் அமைப்பதன் மூலம் எதிர்கால வாக்காளர்களைத் தனது இயக்கத்தின் கீழ் கொண்டுவருவது.
தேர்தல் நேரத்தில் மட்டும் வராமல், இப்போதே கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் அலுவலகம் போன்ற மையங்களை நிறுவுவது. அதோடு முக்கியமாக தலித் வாக்குகள் விஜய்யிடம் இருந்து அப்படியே தனுஷ் பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
தனுஷின் இந்த இலவச டியூஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது ஆளும் திமுகவை விட, இளைஞர் வாக்குகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் தவெகவிற்குத்தான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தனுஷின் இந்த நகர்வை எதிர்கொள்ள விஜய் தரப்பு என்ன மாதிரியான புதிய வியூகத்தைக் கையில் எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




Click it and Unblock the Notifications
