கருப்பு முருகானந்தம் மட்டுமில்லை.. அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் பதவியையும் பறித்த பாஜக
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் கூறினார். இதையடுத்து கருப்பு முருகானந்தத்தின் பதவி நேற்று பறிக்கப்பட்ட நிலையில் அவர் மீது புகாரளித்த பெண்ணின் பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளராக கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார். இவர் மீது பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய தலைவர்களுக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ''நான் கர்நாடகாவில் பாஜகவின் ஓபிசி பிரிவின் செயலாளராக செயல்பட்டு வந்தேன். பிறகு 2024ல் திருச்சிக்கு வந்தேன். பாஜகவின் தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளராக இருப்பவர் கருப்பு முருகானந்தம் என்னை ஏமாற்றிவிட்டார். நான் சிங்கிள் பேரண்ட். மாற்றுத்திறனாளியாக இருக்கும் 2 குழந்தைகளை கவனித்தபடி
அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
நான் கருப்பு முருகானந்தத்தை அதிகமாக நம்பினேன். கருப்பு முருகானந்தம் என்னை திருமணம் செயய்து கொள்வதா கூறினார். என்னுடைய குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் guardian என்று அவரது பெயர் உள்ளது. அவரை என் குழந்தைகள் 'அப்பா' என்று தான் அழைப்பார்கள். 2026 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சீட் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் ஏமாற்றிவிட்டார். மேலும் திருச்சி வந்த பிறகு அவர் எனக்கு உடல் ரீதியாகம், மனரீதியாகவும் துன்புறுத்தினார். அவருடனான உறவால் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்க வைத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நேற்று கருப்பு முருகானந்தத்தின் பதவி பறிக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் மாநில தலைவர் நியினார் நாகேந்திரன் வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக தான் கருப்பு முருகானந்தம் மீது புகாரளித்த பெண் நிர்வாகியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் ஓபிசி அணியின் மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ''தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஒருவர் (பெண்ணின் பெயர் இருந்தது; அடையாளத்தை மறைக்க இங்கு குறிப்பிடப்படவில்லை) கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஓபிசி அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்'' என்று கூறப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது என்பதால் அந்த பெண்ணின் பெயரை இங்கு வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications
