ஆயுத பூஜைக்கே பட்டாச்சு! தீபாவளிக்கும் இதே நிலையா? மாதவரத்தில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதி
சென்னை: சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்துகள் கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

அதாவது கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் சிஎம்டிஏ கால நிலை பூங்கா (தற்காலிக பேருந்து நிலையம்), மறைமலை நகர் நகராட்சி திடல் (தற்காலிகம்), புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம்.
இந்த பேருந்து நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்பு பேருந்துகள், 16 முக்கிய இடங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளை நேரடியாக ஏற்றிச் செல்லும் பேருந்துகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

இந்த பேருந்து நிலையத்தில் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுடன் சில வழக்கமான சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட வழித்தடங்களுக்கான பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் திருச்சி, கும்பகோணம், வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்தும், உரிய நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், அவர்கள் பயணிக்க போதிய பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள், பேருந்து இயக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே சிறப்புப் பேருந்துகளை அறிவிப்பதுடன், அறிவிக்கப்பட்ட பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க வேண்டியது போக்குவரத்துத் துறையின் பொறுப்பாகும்.

எனவே, மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றும், பயணிகளின் சிரமத்தைப் போக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆயுத பூஜையின் போது தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையத்திற்கு சென்ற பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வராமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு சில அரசு பேருந்துகள் முன்பதிவை திடீர் திடீரென ரத்து செய்ததால் பயணிகள் ஆவேசமடைந்தனர். கடந்த ஆட்சிகளில் இது போன்று சிரமத்தை தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் தவெகவினருக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தன. அப்படியிருந்தும் தீபாவளி பண்டிகைக்காவது போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
