தீபாவளி! கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ 200-க்கு 10 மளிகை பொருட்கள்! என்னென்ன கிடைக்கும்?
சென்னை: சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ 200-க்கு பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த பொருட்கள் மலிவு விலைக்கு கொடுக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

அதாவது புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, வடகிழக்கு பருவமழை + எல் நினோ பாதிப்பு குறித்தும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனினும் முக்கிய அஜென்டாவாக கூட்டுறவு அங்காடிகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாம்.
தீபாவளி பண்டிகையின் போது கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலைக்கு முக்கிய மளிகை தொகுப்பு வழங்க தவெக அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றம், ஏழை எளிய மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் தீபாவளிக் பண்டிகையையொட்டி சலுகை விலையில் மளிகை பொருட்கள் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதன்படி கூட்டுறவு அங்காடிகள் மூலம் சென்னையில் நாளை முதல் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், சீரகம், புளி, பூண்டு, கடுகும் உள்ளிட்ட 10 பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. வழக்கமாக இந்த பொருட்களை வாங்கினால் ரூ 600 முதல் ரூ 700 வரை செலவாகும். ஆனால் இதை மொத்தமாக டெண்டர் எடுத்து வாங்கினால், குறைத்து வாங்கலாம் என்பதால் தமிழக அரசு டெண்டர் விட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.29 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ரூ 200-க்கு மளிகை பொருட்களை கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போதுதான் ரொக்கத் தொகையும், சிறப்பு மளிகை தொகுப்பும் வழங்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகைக்கே வழங்கலாம் என விஜய் முடிவு செய்ததால் நிதிக்காக என்ன செய்வது என அதிகாரிகள் யோசனையில் இருந்தனராம். ஆனால் விஜய், மக்களின் விலைவாசி சுமையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாளை முதல் இந்த மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
