கோவையை குறிவைத்த திமுக.. களமிறங்கும் 10 வேட்பாளர்கள் யார்? அதிமுக கோட்டையை தகர்க்கும் வியூகம் என்ன?
சென்னை: கடந்த முறை கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை மொத்தமாக அள்ளி, கோவையை திமுக கோட்டையாக்க வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளது திமுக. கோவை மாவட்ட வேட்பாளர்கள் தேர்வில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறதாம். கோவையின் 10 தொகுதிகளைப் பொறுத்தவரை தலைமையின் மனதில் இருப்பவர்களின் பெயர்களைக் கசியவிட்டிருக்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
அரசியல் கட்சிகள் அனைத்தும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. கூட்டணிகளுக்குள் தொகுதிப் பங்கீடு நடைபெற்று எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. எந்தத் தொகுதியில் யார் வேட்பாளராக வருவார் என அரசியல் களத்தில் இப்போதே பெரும் விவாதமே நடந்து வருகிறது.

கோவை திமுக வேட்பாளர்கள்
அதிலும் குறிப்பாக கோவையில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் மொத்தம் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது.
இந்த முறை எப்படியாவது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என 4 ஆண்டுகளுக்கு முன்பே செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்ட பிறகு கோவையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளையும் கைப்பற்றியது.
கோவை யார் கோட்டை?
ஆனால் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. எனவே, இந்த சட்டசபைத் தேர்தலிலும் கோவை மாவட்டத்தில் அதிமுகதான் வெற்றி பெறும் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். கோவை மாவட்டம் எங்கள் கோட்டைதான் என அவர்கள் கொக்கரித்து வருகின்றனர். அதேசமயம், இந்த முறை அதிமுகவின் கணக்கு மாற்றி எழுதப்படும் என்றும், திமுகதான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதற்கு உறுதுணையாக செந்தில் பாலாஜி இருப்பார் எனவும் திமுகவினர் அடித்துச் சொல்கின்றனர்.
அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல்கள் நடந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கோவையை மையமிட்டு அந்தச் சூடு இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. தேர்தல் வெற்றி என்பது களப்பணியை விட வேட்பாளர் தேர்வும் முக்கியம். அந்தவகையில் கோவையில் வெற்றி வாகை சூட, வேட்பாளர் தேர்வில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மிகுந்த கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
திமுக வேட்பாளர்கள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துவிட்டது. திமுக வட்டார தகவல்களின்படி, இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள 8 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறது என்கிறார்கள். மிஞ்சிப் போனால் கூடுதலாக ஒரு தொகுதி கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்படும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்படுவார்கள் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
10 பேர் லிஸ்ட்
மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் கூடலூர் நகராட்சி தலைவரும், கூடலூர் நகர திமுக செயலாளருமான அறிவரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரமும் தலைமையின் சாய்ஸில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் திமுக மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிறது அறிவாலய வட்டாரம். முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ராஜீவ் காந்திக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவும் இருப்பதால் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக இப்போதே ரெடியாகி வருகிறார் ராஜீவ் காந்தி.
சிங்காநல்லூர்
சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியில் கோவை மாநகர் மாவட்டச் செயலாள்ர் செந்தமிழ்ச் செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என்கிறார்கள். திமுகவின் கோவை மாநகர மாவட்ட செயலாளராக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த நா.கார்த்திக் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக திமுக கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளராக பீளமேடு பகுதிச் செயலாளர் செந்தமிழ்ச் செல்வன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். எத்தனை சீனியர் புள்ளிகள் இருந்தாலும் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவரான செந்தமிழ் செல்வனுக்கு தான் இந்த முறை சிங்காநல்லூர் சீட் என்கிறார்கள் உள்ளூர் திமுகவினர்.
சூலூர் சட்டசபை தொகுதியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வேட்பாளர் ஆக்கப்படுவார் என்கிறார்கள். பொள்ளாச்சி தொகுதியில் திமுக ஐடி விங் இணை செயலாளரான டாக்டர் மகேந்திரன் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தில் இருந்தபோது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற மகேந்திரன் இந்த தேர்தலில் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஆவார் எனக் கூறப்படுகிறது.
கூட்டணிக்கு 2 அல்லது 3
கிணத்துக்கடவு தொகுதியில் குறிச்சி பிரபாகன் மீண்டும் களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கிணத்துக்கடவு தொகுதியை கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒதுக்கி, அங்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோவை வடக்கு தொகுதியை கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், வால்பாறை தொகுதியை சிபிஐ-க்கும் ஒதுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டின் போது, இதில் சில தொகுதிகளில் மாறுதல்கள் ஏற்படலாம் என்றும், இப்போதைக்கு இதுதான் நிலவரம் என்றும் கூறுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications