புத்தகம் கொள்முதல் செய்ய ஆணையிட்ட அதிகாரிகள் யார்? விசாரணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!
கோவை: கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் அளித்துள்ளது. கொள்முதல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஆளும் தவெக - எதிர்க்கட்சியான திமுக இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. புத்தக கொள்முதல் முறைகேடு கடந்த ஆட்சியில் நடந்தது என தவெகவும், தவெக ஆட்சியில் தான் முறைகேடு நடந்துள்ளது என்று திமுகவும் மாற்றி மாற்றி குற்றம்சாட்டி வருகின்றன.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் பரந்தாமன், தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் வெளியிடவில்லை? அகல்விளக்கு புத்தக நிறுவனத்திற்கு எப்போது கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டது, எந்த தேதியில் இந்த புத்தகங்கள் எல்லாம் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சர் ராஜ்மோகன், "பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டு, அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. திமுக ஆட்சியில்தான் ஊழல் நடந்துள்ளது. நூலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்க திமுக அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. பெரியார் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியது தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 14-ஆம் தேதி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் முறைகேடு குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. திரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
ஆகியவை விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
