ஆயுதபூஜை! ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணக் கொள்ளை! துணை போகிறதா தவெக அரசு? திமுக ஐடி விங் கேள்வி
சென்னை: ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் 8 மடங்கு உயர்ந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 6 முதல் 8 மடங்கு வரை கொடூரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால் இது 12 முதல் 14 மடங்கு அதிகமாகும்!

போக்குவரத்துத் துறை அமைச்சரே இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? எப்போது தான் இதை சரி செய்யப் போகிறீர்கள்?
ஆம்னி பேருந்துகாரர்கள் இப்படிப் பகல் கொள்ளை அடிப்பதைத் தடுக்க நேரில் வந்து ஆய்வு செய்வீர்களா? இல்லை, இன்னும் ஆம்னி பேருந்து முதலாளிகளிடமும், நெடுஞ்சாலை உணவகங்களிடமும் 'கமிஷன்' வாங்கும் பிஸியிலேயே இருக்கிறீர்களா?
பண்டிகை காலம்
பண்டிகை நெருங்கும் முன்பே முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கி, இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாத தவெக அரசின் இந்த நிர்வாகக் கையாலாகாதத்தனத்திற்குப் பின்னணியில் இருக்கும் 'கமிஷன் டீலிங்' என்ன? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை, விஜயதசமி வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். அவர்கள் அரசு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் செல்வதுண்டு.
பேருந்து டிக்கெட்
அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வர். அப்போது அவர்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தாலும் இந்த கட்டணக் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.
சென்னை சாலைகளில் மக்கள் கூட்டம்
இந்த நிலையில் சென்னையில் இருந்து இன்று மாலை முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்குவார்கள். சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று மாலை முதலே சாலைகளில் கூட்டம் அலைமோதும்.
கட்டணக் கொள்ளை
இதையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல, அரசு பேருந்தில் 579 ரூபாய் என்றால் ஆம்னி பேருந்தில் இந்த பண்டிகை நாளில் 3,759 ரூபாயாகும்.
அது போல் நெல்லை செல்ல அரசு பேருந்துகளில் ரூ 514, ஆனால் ஆம்னி பேருந்துகளில் 3,759 ரூபாயாகும். தூத்துக்குடி செல்ல அரசு பேருந்துகளில் 491 ரூபாயும், ஆம்னி பேருந்துகளில் 3618 ரூபாயும் , மதுரை செல்ல அரசு பேருந்துகளில் 383 ரூபாயும் , ஆம்னி பேருந்துகளில் 3,999 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
திருச்சி செல்ல அரசு பேருந்துகளில் 269 ரூபாயும் ஆம்னி பேருந்துகளில் 3999 ரூபாயும் கட்டணம் ஆகும். அது போல் கோவை செல்ல அரசு பேருந்துகளில் 417 ரூபாயும் ஆம்னியில் 3860 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சேலம் செல்ல அரசு பேருந்துகளில் 274 ரூபாயும், ஆம்னியில் 3999 ரூபாயாகவும் உள்ளது.
எவ்வளவு கட்டணம்?
சென்னை டூ ஈரோடு செல்ல அரசு பேருந்துகளில் 329 ரூபாயும், ஆம்னியில் 3999 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக இந்த ஊர்களுக்கு 400 முதல் 600 ரூபாய் வரைதான் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஆயுதபூஜையொட்டி 8 மடங்கு கட்டணமும், அரசு பேருந்துகளை விட 15 மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்னதான் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த கட்டண உயர்வை அவ்வப்போது மறுத்து வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
