இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் - சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்து வரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
ஏழு மாத பயணத்திற்குப் பிறகு நாசா தன் பெர்சிவரன்ஸ் ரோவரை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவர் சுவாதி மோகன் உறுதி செய்தார். நாசா விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானி சுவாதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
சுவாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் சுவாதி மோகனுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாயில் இறங்கிய நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் - பெருமை சேர்த்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி
நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதைக் கண்டு வியப்படைகிறேன் எனவும் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சுவாதி மோகனுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.