வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு.. சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக.. பேட்ஜை வாங்காத அதிமுக!
சென்னை: நாடாளுமன்ற லோக் பாவில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்ட போது, அதனை அதிமுக எம்எல்ஏ-க்கள் வாங்க மறுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நள்ளிரவு வரை வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகள் பதிவாகின.

இதன்பின் நள்ளிரவு 2 மணியளவில் லோக்சபாவில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக தமிழக சட்டசபையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் லோக்சபாவில் மசோதா நிறைவேறிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபைக்கு கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் கருப்பு பட்டை அதிமுக எம்எல்ஏ-க்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை வாங்க மறுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். தொடர்ந்து வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதம் முடிவடைந்த நிலையில், சட்டசபை வளாகத்திலேயே திமுக எம்எல்ஏ-க்கள் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். "இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே, இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே" என்ற பதாகைகளுடன் திமுக எம்எல்ஏ-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications