இந்தியில் லெட்டர் வந்தா தமிழ்ல ரிப்ளை அனுப்புவேன்.. டிசைன் டிசைனா வர்றாங்க.. பாஜகவை விளாசிய கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக இந்தி திணிப்பை வெவ்வேறு ரூபங்களில், நாம் எதிர்பார்க்காத வகைகளில் எல்லாம் மேற்கொண்டு வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார் திமுக எம்.பி கனிமொழி. ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பேசியுள்ள கனிமொழி, "எனக்கு பல கடிதங்கள் இந்தியில் வருகிறது, நான் தமிழில் பதில் எழுதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி, ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் மேற்கொள்ளப்படும் இந்தி திணிப்பு பற்றிப் பேசியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் தான் ஆவேசமாகப் பேசியதற்கான காரணம் குறித்தும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் கனிமொழி. இனி அவரது பேட்டி..

திமுக vs பாஜக

திமுக vs பாஜக

கேள்வி : ஜனா கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன், கிருபாநிதி ஆகியோர் தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்த காலத்தில் திமுக - பாஜக இடையே சித்தாந்த ரீதியாக ஒத்துப்போகாவிட்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல இணக்கம் இருந்தது. அந்த நிலை இன்றும் இருக்கிறதா? திமுக - பாஜக இடையே வார்த்தை ரீதியாக தாக்குதல்கள் தொடர்ச்சியாக இருக்கின்றனவே?

பதில் : நீங்கள் கையில் எடுக்கக்கூடிய ஆயுதங்கள் தான், என் கையில் இருக்கும் ஆயுதங்களை நிர்ணயிக்கும். தமிழிசை சௌந்தரராஜன் தலைவராக இருந்தபோது கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். அதேபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையோ, மத்திய அமைச்சர்களையோ சந்திக்கும்போது இனிமையான சந்திப்புகளாகவே அவை அமைகின்றன. சில தலைவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வார்த்தைகள் இணக்கத்தை கெடுப்பதாக அமைந்துவிடும்போது அதற்கு திமுக அதற்கு என்ன செய்ய முடியும்? அரசியல் நாகரீகத்தைக் காக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாக இருந்திருக்கிறது. கலைஞர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று அந்த நிலை மாறி இருக்கிறது என்றால் அதற்கு திமுக காரணம் அல்ல.

மூன்றாவது அணி

மூன்றாவது அணி

கேள்வி : மூன்றாவது அணி என ஒன்று அமைந்தாலே அது பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்று அரசியல் விமர்சகர்களால் சொல்லப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி போன்ற கட்சிகளின் வளர்ச்சி, பாஜகவை வலுப்படுத்தி இருக்கிறதா?

பதில் : ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது, அந்தக் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயல்படுபவர்களால் ஏற்படுவது. கட்சியில் உறுப்பினராக இல்லாமல், கட்சியின் சித்தாந்தை ஏற்றுக்கொண்டு வெளியில் இருந்து செயல்படுபவர்களும் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். இன்னொரு அணி என்பது ஒரு கட்சிக்கு எதிராக இருக்ககூடிய வாக்குகளை பிரிக்கும், ஆனால், அது இன்னொரு கட்சிக்கு வலு சேர்த்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை. தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கு சாதகமாக அமையலாமே தவிர, கட்சியின் வளர்ச்சிக்கு அது காரணமாக அமையாது.

நியாயமாக எழுந்த கோபம்

நியாயமாக எழுந்த கோபம்

கேள்வி : முதலமைச்சர் ஸ்டாலின் உங்களை 'நாடாளுமன்ற புலி' என வர்ணித்தார். அதற்கு ஏற்ற வகையில் 'என்ன அநியாயம் இது' என்று உங்கள் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியிடம் நீங்கள் கேட்டது இந்தியாவெங்கும் ஒலித்தது. உங்களது அந்தக் குரல் இவ்வளவு பேசுபொருளாகும் என எதிர்பார்த்தீர்களா?

பதில் : 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று போராடி வரும் சூழலில், நம்மோடு ஒத்த கருத்தோடு இருக்கக்கூடியவர்கள் அதற்கு எதிராகப் பேசும்போது எழுந்த நியாயமான குரல். இன்று வரை நான் பெரிதும் மதிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர் அவர், அதனால், தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. இந்த EWS இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவதன் அரசியல் பின்னணி புரிந்ததால் வரும் கோபம் தான் அது. ஒரு காலகட்டத்தில் இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் போய்விட வேண்டும், சிலர் மட்டும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதன் முதல் கட்டம் தான் இது. அந்த அரசியல் புரியும்போது வரக்கூடிய கோபம் தான் அது.

இந்தி திணிப்பு : காங்கிரஸ் - பாஜக

இந்தி திணிப்பு : காங்கிரஸ் - பாஜக

கேள்வி : இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. காங்கிரஸ் கால இந்தி திணிப்பு, நீட், பாஜகவின் இந்தி திணிப்பு, நீட் ஆகிய பிரச்சனைகளில் திமுக எப்படி எதிர்வினை ஆற்றுகிறது? இரண்டு கட்சிகளை எதிர்ப்பதில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கிறதா திமுக?

பதில் : அதே காத்திரத்தோடு, அதே அழுத்தத்தோடுதான் இப்போதும் எதிர்க்கிறோம். அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கம் என ஒன்று பெரிதாக இல்லாத நிலையில் மாணவர்கள் இறங்கிப் போராடும் நிலை இருந்தது. இன்று ஆட்சியில் இருக்கிறோம். தமிழ்நாட்டை காக்கும் அரணாக பொறுப்புடன் திமுக இருக்கக்கூடிய சூழலில் முந்தைய போராட்டத்தைப் போல தீவிரமாக கையில் எடுக்கும் சூழல் ஏற்படவில்லை. ஆனால், அதே எதிர்ப்பு நிச்சயமாக இன்றும் இருக்கிறது.

இந்தி கடிதத்துக்கு தமிழில் பதில்

இந்தி கடிதத்துக்கு தமிழில் பதில்

கேள்வி : திமுக ஒரேமாதிரி அணுகுவது சரி, இந்தி திணிப்பில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக தீவிரமாக இறங்கி இருக்கிறதா?

பதில் : காங்கிரஸ் கட்சி இன்று அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பது ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பேச்சு வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் அரசு இந்தியை திணிக்க முயற்சித்தபோது எந்த பூச்சும் இல்லாமல் நேரடியாக இந்தியைக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் எதிர்ப்பதை புரிந்துகொண்ட பிறகு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள். இன்று பாஜக செய்யக்கூடிய மொழித்திணிப்பு என்பது, ஒரு நிமிடம் நாம் சற்று அசந்தாலும், வேறு ஒரு ரூபத்தில் அதை திணிக்கக்கூடிய செயலை நாம் பார்த்து வருகிறோம். அதனால், இன்று எல்லா திசைகளிலும் விழிப்பாக இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு பல கடிதங்கள் இந்தியில் வருகிறது, நான் பதிலை தமிழில் எழுத வேண்டி இருக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? நிர்வாகத்தை விட மொழித் திணிப்பு தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+