தீர்ப்பால் கூட்டணிக்குள் தகராறு.. காங்கிரஸ், சிபிஎம்க்கு விளக்கி புரியவைப்போம்.. இதான் திமுக பிளான்!
சென்னை : 10% இட ஒதுக்கீடு தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விளக்கிச் சொல்லி புரிய வைப்போம் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அடிப்படையில் முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அதேசமயம், காங்கிரஸ், சிபிஐஎம் ஆகிய திமுகவின் கூட்டணி கட்சிகள், 10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
10% இடஒதுக்கீட்டை ஆதரிப்பதால், காங்கிரஸ் கட்சி மற்றும் சிபிஐஎம் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

திமுக எதிர்ப்பு
பொருளாதார அடிப்படையில் முற்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு தமிழகத்தை ஆளும் கட்சியான திமுக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஆலோசனை
10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 8ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த தீர்ப்பு விவகாரத்தில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவிலேயே அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்பது என முடிவு செய்யப்பட்டடது.

அனைத்துக் கட்சி கூட்டம்
அதன்படி, வரும் நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் பங்கேற்குமா?
10% இடஒதுக்கீட்டை பாஜக வெளிப்படையாகவே ஆதரிப்பதால், அக்கட்சி இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், இதுவரை இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருவதால், அதிமுகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. எனவே காங்கிரஸ், சிபிஐஎம் கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சொல்லி புரிய வைப்போம்
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்களின் இந்த முரண்பாடு அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பாஜகவின் நிலைப்பாட்டையே காங்கிரஸும் எடுத்துள்ளதால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுமா என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விளக்கி சொல்லி புரிய வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை இருக்கிறதே
மேலும், வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கினால் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கியவர்களின் இட ஒதுக்கீடு குறைந்துவிடும். ஆகவே தான் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி தொகை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்,












Click it and Unblock the Notifications