ஆஹா.. ஆவின் தயிரில் ரூ.15 யாருக்கு போகிறது.. ஸ்டாலினுக்கா? "சின்னவருக்கா".. கணக்கு கேட்ட எச். ராஜா
தமிழக அரசு தயிர் விலையை ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என எச் ராஜா கேட்டுள்ளார்
சென்னை: நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5 சதவீத வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும்? ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா? அல்லது அவரது மருமகன் சபரீசனுக்கு போகிறதா? இல்லை, சின்னவர் உதயநிதி ஸ்டாலினுக்கு போகிறதா? என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபகாலமாகவே, கேஸ்விலை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துமே விலைஉயர்ந்துள்ளது.. போதாக்குறைக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரிவிதிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜிஎஸ்டி - எதிரொலி
எப்போதுமே, உணவு பொருட்களுக்கு வரி உயர்வு என்பது இதுவரை இருந்ததில்லை.. அதிலும், இதுநாள் வரை, அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது கிடையாது... ஆனால், மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை இப்போது விதித்துள்ளதும், இந்த வரி அமலுக்கு வந்துள்ளது மிகப்பெரிய அதிருப்தியை எற்படுத்தி வருகிறது... மத்திய அரசுக்கு எதிராக, அனைத்து கட்சிகளும் இந்த விலைவாசி உயர்வை கையில் எடுத்துள்ளன.. லோக்சபாவிலும் விலைவாசி உயர்வு பிரச்சனை எதிரொலித்து கொண்டே இருக்கிறது.

பால் விலை
நேற்றைய தினம்கூட, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனிடையே, சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. அரிசிக்கும் ஜிஎஸ்டி விதித்ததையடுத்து, பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது மக்களிடம் மேலும் அதிருப்தியை கிளப்பியது.. பால் விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என்று அமைச்சர் நாசர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஆவின் பொருள்களின் விலை உயர்வு என்ற அறிவிப்பு திடீரென வெளியாகியது.

எச்.ராஜா
விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வரும் நிலையில், பால், தயிர் விலை குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்... மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பாஜக தேசிய மகளிர் அணியும், எம்எல்ஏவுமான தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. விழாவின் முடிவில் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

அறியாமை
அப்போது அவர் சொன்னதாவது: "ஜிஎஸ்டி பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினால் முறை தவறி பேசுகிறார்... சட்டம் தெரியாமல் அவர் பேசுகிறார். ஒன்று அறியாமையில் பேசுகிறார்... இல்லாவிட்டால் ஆணவத்தில் பேசுகிறார். இதற்கு எப்படி பாரத பிரதமர் மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்? ஜிஎஸ்டி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்... ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் நிதித்துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.. முதல்முறை நடந்தபோது வளைகாப்புக்கு சென்றுவிட்டார்... இரண்டாவது முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தில்தான் கலந்து கொண்டார்.

நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கியது முதல் 2 கொள்கைகளை கடைப்பிடிக்கிறது... நம் நாட்டின் 32 விதமான வரிகள் இருந்தது... 32 வரிகளை நாங்கள் ஒன்றாக ஆக்கி இருக்கிறோம். 36 வகையான விலைகள் உள்ளன... இதனை 4 வகையில் கொண்டு வந்திருக்கிறோம்... ஜிஎஸ்டி பற்றி மாநில கட்சி தலைவர்களோ மாநில முதலமைச்சர்களோ பேசுவதற்கு எந்தவிதமான அருகதை இல்லை... 1200 வகையான உற்பத்தி பொருட்கள் உள்ளன. இவற்றில் அனைத்திற்கும் வரி விகிதத்தை பெரும்பான்மையுடன் பாஜகவோ அல்லது மோடியோ நிர்மலா சீதாராமனோ முடிவு செய்யவில்லை.

சபரீசன்
கருத்து ஒற்றுமையுடன் கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் ஒருமித்த கருத்தோடுதான் முடிவு செய்யப்பட்டது.. நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5 சதவீத வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும்? ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா? அல்லது அவரது மருமகன் சபரீசனுக்கு போகிறதா? இல்லை, சின்னவர் உதயநிதி ஸ்டாலினுக்கு போகிறதா?' யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு. வரி உயர்வு செய்தால் 105 ரூபாய்க்கு தானே இருக்க வேண்டும் . 15 ரூபாய் மக்கள் பணத்தை சுரண்டுகிறது ஸ்டாலின் அரசு. இது தமிழகத்தில் நடக்கும் கொள்ளை" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கலைஞர் கனல் கண்ணன்
கனல் கண்ணன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, "ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார்.. உடனே, மிரட்டுவதற்காக போலீசார் அவரது வீட்டுக்கு செல்கிறார்கள்.. அவருக்கு கருத்து உரிமை கிடையாதா? அதேசமயம் சுவாமி நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் வெளியிட்டவரின் வீட்டுக்கு செல்ல போலீசிற்கு பாதை தெரியவில்லையா? திமுகவின் கைக்கூலியாக போலீஸ் இருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது... இது ஒரு கார்ப்பரேட் அரசாங்கம்.. ரூ.35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது ஸ்டாலின் அரசாங்கம்... அதானியின் கைக்கூலி அரசாக திமுக உள்ளது" என்று பதிலளித்தார் எச்.ராஜா












Click it and Unblock the Notifications