கூட்டணி.. “ஓஹோ.. அது கன்ஃபார்ம் போல!” சைஸாக ஒதுங்கும் கட்சிகள்.. ரெண்டு பக்கமும் ரூட் போடும் தலை!
சென்னை : பாமக ஒருபக்கம் திமுகவுக்கு இண்டிகேட்டர் போட்டுக்கொண்டே, அதிமுக கூட்டணி பக்கம் ஸ்டியரிங்கை திருப்பி வருகிறது. மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணிக்கு டெல்லி வழியாக ரூட் போட்டு வருகிறது. இப்படியாக தமிழக அரசியலில் கூட்டணி வியூகங்கள் தீவிரமடையத் தொடங்கி இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலத்திற்கு மேல் இருக்கும் நிலையில், இப்போதே கட்சிகள் கூட்டணி தொடர்பான நகர்வுகளைத் தொடங்கிவிட்டன.
திமுக, அதிமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும், கூட்டணிக்குக் கைகோர்க்கத் தயாராகி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சில எதிரணிக்குத் தாவக்கூடும் என்ற பேச்சுகளும் கிளம்பி இருக்கின்றன.

கிளம்பும் பேச்சுகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணியை உறுதி செய்யும் பணிகளில் பல கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக இரண்டுமே மெகா கூட்டணி அமைக்கும் முடிவிலேயே இருக்கின்றன. பெரிய கட்சிகள் இப்படி என்றால், ஒரு சீட் வாங்கும் கட்சிகளும், இப்போதே பொதுக்கூட்டம், மாநாடு, போராட்டம் எனக் களமிறங்கி, தங்கள் பலத்தைக் காட்ட முயன்று வருகின்றன. இப்படியாக, நாட்கள் நகர நகர தமிழக அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்து வருகின்றன.

கூட்டணி கணக்கு
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை நெருக்கடி கொடுத்து வருவதால், பாஜக கூட்டணியையே கைகழுவ எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான கூட்டணிக் கணக்கைப் போடப்போகிறார் என்பது பற்றி அரசியல் வல்லுநர்கள் மத்தியில் தீவிரமாக அலசப்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனித்து நிற்பதாக பேசி வருவதும் களத்தை இன்னும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணி உடைவு
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பலர் பாஜகவால் தான் தாங்கள் தோல்வியடைந்ததாக கருதுகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகள் பாஜக கூட்டணியால் பறிபோகின்றன என்பது அவர்களது வாதம். பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தால், இன்னும் அதிக வாக்குகளைப் பெற முடியும் என்பது அவர்களின் தரப்பாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் திமுக + பாஜக கூட்டணி அமையப்போகிறது என்ற பேச்சும், அதனை வழிமொழிந்துள்ள ஜெயக்குமார் பேச்சும் இந்தக் கருத்தை ஒட்டி எழுந்தவைதான் என்கிறார்கள்.

விசிக + இடதுசாரிகள்
பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பின் விருப்பமாக இருக்கிறது. வட மாவட்டங்களில் பாமகவின் பலம் பெரிய அளவில் உதவும் என்பது அவர்களின் திட்டம். மேலும், தேமுதிகவையும் கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். ஈபிஎஸ் தரப்பினர், விசிக மற்றும் கம்யூனிஸ்ட்களையும் உள்ளே இழுக்கலாம் என்கிற நோக்கிலேயே, அந்தக் கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் என பேசி வருகின்றனர்.

பாமக
பாமக தலைவர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் சமீபத்தில் மாண்டஸ் புயல் நடவடிக்கைகளுக்காக திமுக அரசை பாராட்டி இருந்தனர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றபோது, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களோடு, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியும் பங்கேற்றார். இதனால், திமுக கூட்டணிக்கு பாமக சிக்னல் கொடுப்பதாக கருதப்பட்டது. இன்னொரு பக்கம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நடத்திய மாநாட்டில், அதிமுக தலைவர்கள் முன்னிலையில் பாமகவின் பொருளாளர் திலகபாமா பங்கேற்று, வன்னியர் + தேவேந்திரர் = ஆட்சி அதிகாரம் என புது ஃபார்முலா சொல்கிறார்.

இரண்டு பக்கமும் ரூட்
பாமக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்றே தெரிகிறது. அதன் காரணமாகவே, திமுக, அதிமுக இரண்டு சைடுமே அன்புமணியோ, ராமதாஸோ பங்கேற்காமல், தங்கள் சார்பாக ஜிகே மணி, திலகபாமாவை அனுப்பி வைத்துள்ளனர். ஒருவேளை, ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலால் அதிமுகவுக்கு சின்னம் கிடைக்காவிட்டால், பழைய ஓட்டு சதவீதம் இருக்காது, நாம் அங்கு நம்பிச் செல்ல முடியாது என பாமக அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இரு பக்கமும் தலையாட்டி வருவதாகத் தெரிகிறது.

அமமுக - டிடிவி தினகரன்
இன்னொரு பக்கம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைகளை நடத்த இருக்கிறார். வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அதிமுக + பாஜக கூட்டணியில் இணைய தினகரன் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், பாஜக - அதிமுக கூட்டணி அமைவதே பெரிய கேள்விக்குறியாக இருப்பதால், தினகரனின் நிலைப்பாடு என்ன என்பது போகப்போகத் தெரியும்.

மக்கள் நீதி மய்யம்
நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்கும் நோக்கில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். முதன்முதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம 2.6% வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலிலும் அதே அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றது மநீம. கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.

கமல் - உதயநிதி நெருக்கம்
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். திமுகவை விமர்சிப்பதை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்ட கமல்ஹாசன், பாஜகவையும், தமிழக ஆளுநரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் மீண்டும் அரசியல் பாதையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் மீண்டும் கூடு திரும்பியுள்ளனர்.

மநீம கூட்டணி
நேற்று மநீம அவசர நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி பற்றியும் தேர்தல் வியூகம் பற்றியும் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் கூட்டணி தொடர்பாக ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "எந்த திசையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கே புரியவரும். என் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது புரியும்" என பொடி வைத்துப் பேசினார்.

ராகுலுடன் இணையும் கமல்
இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் 24 ஆம் தேதி கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் பேட்டியில் சொன்னதையும், அவரது டெல்லி பயணத்தையும் பார்த்தால், அவர் திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கு அஸ்திவாரம் போடுவதாகவே தெரிகிறது. ஏற்கனவே திமுக தலைமையுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள கமல்ஹாசன், காங்கிரஸுடன் கைகோர்த்து, திமுக கூட்டணியை உறுதி செய்யப் போகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications