அடுத்தடுத்து ‘மறைமுக’ அட்டாக்.. கோபத்தில் திருமா? சைஸா என்ட்ரி கொடுக்கும் பாமக.. ரூட் மாறுதே! ஆஹா!
சென்னை : அடுத்தடுத்து, திமுகவை மறைமுகமாக தாக்கும் வகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம், பாமக திமுகவை நோக்கி நெருங்கி வருவதால், விசிக தலைவர் திருமாவளவன் அப்செட்டாகி 'தோழமை சுட்டலை' தொடங்கி இருக்கிறாரா எனும் கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
சமீபத்தியில் சினிமா விழா ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திரையரங்குகள் ஒருவரது பிடியில் இருக்கின்றன என தெரிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைமை பஞ்சம் நிலவுகிறது, மக்களை நேசிக்கும் தலைவர் இல்லை என திருமாவளவன் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக கூட்டணியில் பாமக வருவதாக சூழல் தென்படுவதால், திருமாவளவன் இப்படியெல்லாம் பேசுவதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் கூட்டணி
2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலத்திற்கும் மேல் இருந்தாலும் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாகவே தெரிகிறது. ஏற்கனவே கூட்டணிகளில் இருக்கும் கட்சிகள் மட்டுமல்லாது, மற்ற கட்சிகளை நோக்கியும் பெரிய கட்சிகள் கை நீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் முக்கியமாக திமுக கூட்டணியில் பாமக இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதிமுக vs பாமக
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததுமே அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அப்போதே அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக சலசலப்பு இருந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. அதற்கேற்றார்போல் பாமகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விடியல் + பாமக
இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், விடியலுக்காக நாம் காத்திருக்கிறோம். விடியலுக்கு வெகு நேரம் இல்லை எனப் பேசினார். திமுக ஆட்சியை விடியல் ஆட்சி எனக் குறிப்பிடும் சூழலில் ராமதாஸ் 'விடியல்' பற்றிப் பேசியது திமுகவுக்கு சமிக்ஞையாக பார்க்கப்பட்டது. அதேபோல, அன்புமணி ராமதாஸ், அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது, பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது, பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார். அந்த அளவிற்கு பாமகவின் குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்று பேசினார். இருவருமே திமுகவை விமர்சிக்காமல் பேசினர்.

தியேட்டர் மொத்தமும்
இந்நிலையில் எம்ஜிஆர் பேரன் திரைப்பட விழாவில் பங்கேற்று எம்ஜிஆரின் பெருமைகளைப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திரை உலகம் கார்ப்பரேட் மாயமாகி வருகிறது. தியேட்டர்கள் மொத்தமும் ஒருவரின் கையில் வந்துவிட்டால் என்ன ஆகும்? திரைத்துறை கார்ப்பரேட் மயத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பேசினார். இது ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினை குறிக்கிறது என்றும் சலசலப்பு எழுந்தது.

தலைமை பஞ்சம்
இந்நிலையில், வழக்கறிஞர்கள் பேரவை முன்னெடுத்து நடத்திய திருமாவளவன் மணிவிழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "நாட்டிலே சோற்றுப் பஞ்சமா தலைமைப் பஞ்சமா என்றால் தலைமைப் பஞ்சம் தான், தலைவர் பஞ்சம் தான் இருக்கிறது. உண்மையாக மக்களை நேசிக்கும், வழிநடத்தும், தொண்டு செய்யும், மக்களை மீட்கிற, மக்களை அரவணைக்கிற தலைமை இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை எனப் பேசியுள்ளார் திருமாவளவன். மக்களை நேசிக்கும் தலைவர் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணியில் புகைச்சல்
திருமாவளவனனின் இப்படியான பேச்சுகளுக்குக் காரணம், பாமக திமுகவை நெருங்கி வருவதுதான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர். பாமக தலைவர்கள் திமுகவுடன் இணக்கம் காட்டுவதால், 2024 தேர்தலுக்கு பாமக திமுக கூட்டணியில் சேர்ந்துவிடும் என்கிற ரீதியில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகத்தான் திமுகவை சீண்டும் வகையில் திருமாவளவன் பேசி வருகிறார், பாமக திமுக கூட்டணியில் இணையும் சூழல் ஏற்பட்டால், திருமா கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயங்கமாட்டார் என்கிறார்கள்.

வருத்தத்திற்குக் காரணம்?
திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் திருமாவளவனோடு மிகவும் நெருக்கமாகவே இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு திருமாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், சகோதரர் திருமாவளவன் கூறியபடி பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது என்பதுதான் நான் அவருக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு எனப் பேசினார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என உரக்கச் சொல்லி திருமாவின் உச்சி குளிர வைத்த ஸ்டாலின், தற்போது பாமகவை சேர்க்க நினைப்பதுதான் திருமாவின் வருத்தத்திற்குக் காரணமாம்.












Click it and Unblock the Notifications